Wednesday, June 23, 2010

புதியதோர் வலைப்பூ செய்வோம்...

கன்னியிவள் கன்னி முயற்சியில்....
எனக்குள் இருந்து ஒருத்தி.....




" முயற்சி திருவினையாக்கும்"

பழைய எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து ஆரம்பத்திலேயே உங்களை அதிருப்தி படுத்துவதில் எந்தளவு எனக்கு இஷ்டமில்லையோ, அந்தளவு இங்கு குறிப்பிடப் பட வேண்டியவொன்றினை அலட்சியப்படுத்தி செல்லவும் நாட்டமில்லை எனக்கு.ஆதலால் கூறுகிறேன்.......
“முயன்று தான் பாருங்களேன்
முடியாதது என்று ஒன்றுமில்லை உலகில்!”

நீண்ட நாட்களாக எனக்கென தனி வலைபூ, அதில் என்னுள் இருந்து தன் உணர்வுகளை தடம் பதிக்க அடம் பிடிக்கும் ஒருத்திக்கு களம் கொடுக்க தருணம் பார்த்து காத்திருந்தேன். அகில இலங்கை தமிழ் மொழித் தினம், விபுலானந்த விழா, திருவள்ளுவர் விழா, கலாசார விழா என விழாக்களால் வளர்ந்த என் பள்ளிக் கால தமிழ் புலமை ,காலம் மாற, கனவுகள் நிறைவேறி சட்டபீட மாணவியாய் நான் ஆன பின்னும் கூட பீட அளவிலான பல்கலை அளவிலான நாடக விழாக்கள், விவாத போட்டிகள் ,சமய நிகழ்வுகள் ,முத்தமிழ் விழாக்கள் என்பவற்றால் இன்னும் காத்திரமாய் என் கையிருப்பில்.

சட்டம், வழக்குகள், உறுப்புரைகள்,பிரிவுகள் என என் வாழ்கை போக்கு சற்று மாறியிருந்தாலும் கூட, தமிழில் கவி படைக்க வேண்டும், கட்டுரைகள் எழுத வேண்டும், சிறுகதை புனைய வேண்டும் ,நாடகம் அரங்கேற்ற வேண்டும் என்ற அவாக்களிட்கோ குறைவில்லை. என் தாகத்திற்கும் ,மோகத்திட்கும் தக்க தீனி போடத்தக்க, தலை நகரில் தனித்துவம் பேணும் சட்டபீடத்திலும், கொழும்பு பல்கலை கழகத்திலும் என் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு கிட்டியமை ,என் தமிழ் காதல் வாழ வேண்டும் என்ற இறை நாட்டமாக இருந்திருக்கலாம்.

விரைந்து ஓடும் வறண்ட வாழ்வு, தலை நகரின் இயந்திரத்தனம், தலைக்கு மேல் அன்றாட வாழ்க்கை பிணக்குகள், மாணவ வாழ்விற்கே உரித்தான விரிவுரைகள், பரீட்சைகள் என்பவற்றுக்கிடையில் நேரம் போதவில்லை என கூறுமளவு இன்னும் எதையும் பெரிதாய் சாதிக்கவில்லை. இந்நாள் அமெரிக்க ஜனாதிபதி ஆம் உன்னால் முடியும் எனக் கூறியே இமாலயமளவு உயர்ந்தவர் கூறுவது போல் தாராளமாக தரணியை ஆள நேரம் இருபத்து நான்கு மணித்தியாலயங்கள் எமக்கென்றே இருக்கிறது, என்ன நேர முகாமைத்துவத்தில் தான் சித்தி பெற தவறிக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்தும். இப்படி மனதுள் கவலை ஒரு புறம் இருந்தாலும் கூட, மறு புறம் அதுவே சவாலாகித்தான் எந்த சஞ்சிகைக்கோ, பத்திரிகைக்கோ, தமிழில் ஒரு ஆக்கம் ....என தருணம் கதவை தட்டும் போது எல்லாம் மறக்காமல், மறுக்காமல் திறந்து வருகிறேன்.
ஏனென்றால்...

தன் முன் வருகின்ற சந்தர்பங்கள் அனைத்தையும் விடாமல் வேட்டையாடி, வெற்றியோ தோல்வியோ சுவைப்பவன் தான் வரலாற்றில் சாதனையாளன் ஆகின்றானம்...யாரை தான் விட்டு வைத்தது சாதனையாளன் ஆகும் ஆசை என்னை மட்டும் விட்டு வைக்க.....இந்நிலையில் தான்,

இப்பிடியெல்லாம் தமிழ், தமிழ், என கொண்டாடுகிறோம், தமிழன்பு மிக்கோரை தேடி பிடித்து வன் போர் கொண்டு பண்பால் உயர்கிறோம். தமிழச்சி நான் என்றே நினைவூட்டி கொள்கிறேன். ஆனால் வாழ்க்கை போகும் போக்கு , வாழ்வினை மாற்றும் இந்நாள் விதியாய் எம்மோடு மோதி விளையாடும் அரசியல் - நாடு செல்லும் போக்கில் எவை தான் நிரந்திரம் இங்கு?
ஆதலாலே,

செல்லும் இடம் எல்லாம் என் ஆக்கங்கள் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சாய் என் வசம் இருக்கவும், அவற்றூடு தமிழுறவு தொடர்ந்திடவும் வழி செய்திடவே இந்த புதியதோர் வலைபூ செய்திடல் .....

“எட்டுத் திக்கும் கல்வி செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்போம் "என மீசை கவி எப்போதோ பச்சை கொடி காட்டி விட்டதால் கால தாமதம் எல்லாம் நன்மைக்கே என கடமையை மறவாது பலனையும் கூட எதிர் பாராது தான் என் சுய திருப்திக்கும், சுய ஆசைக்குமாய் என்னாலும் முடியும் !.... என நிரூபிப்பவளாய் ....
சின்னதாய் ஒரு கன்னி முயற்சி,

வலைப்பூ ஆரம்பித்தல்....நானும் எழுத வேண்டும் என யோசித்த போது எத்தனையோ விடயங்களை பற்றி எத்தனையோ பேர் எழுதி விட்டார்கள்....அதுவும் அந்தந்த துறையில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள்.... ...ஆகவே நானும் எழுத வேண்டும், என் ஆசையும் நிறைவேற வேணும்,.....இவை எல்லாம் சரி வர நடக்கவே வலைப்பூவின் தலைப்பில் அறிமுகம் செய்துள்ளதை போல நான் அதிகம் விரும்பும் தமிழ் ஆக்கங்களையும் ........மற்றும் பலவற்றையும்" என்பதில் நான் ஒரு சட்டம் கற்கும் பல்கலை மாணவி என்பதால் அது சார் ஆய்வு குறிப்புகள், எடுக்க வேண்டிய சீர்திருத்தங்களிட்கான பரிந்துரை கட்டுரைகள் என்பவற்றையும் உங்களோடு வரு நாளில் பகிர்ந்துக் கொள்ள நாட்டம் கொண்டுள்ளேன்.

என் வலைபூ பற்றி, என் பதிவுகள் பற்றி தாரளமாக அலசுங்கள்.அவை அத்தனையும் தமிழையும், தமிழ் நாடும் இவளையும் வளர்த்திடவே.
காய்கின்ற மரத்திற்கே கல்லடி,
காய்கின்ற மரமாக இருக்கவே ஆசை படுகின்றேன்...

புதியதோர் வலை பூ செய்தேன்....
வாரீர்....
துணை தாரீர்.....
பரவட்டும் தேமதுர தமிழோசை திக்கெங்கும்....


பிரியமுடன் உங்களுள் ஒருத்தி
இவள்,
எனக்குள் ஒருத்தி....
ஜனஹா செல்வராஜ் .