Sunday, February 27, 2011

என் கேமரா கண்களில் பாலு மகேந்திராவின் "வீடு "- ஓர் பார்வை .............

அவனிற்கும் எனக்கும் இடையில் நிறைய ஒத்த ரசனைகள் , அவனது நயத்தல் திசை திரும்பும் திக்குகளில் உள்ள ஒவ்வொன்றும் எனக்கும் பிடித்தமானதாய் .அவன் எடுத்துக் கூறி நான் இரசித்த இன்னிசை பட்டியலோ பெரிது.
அவன் என் நண்பன்.
என் பீட நண்பர்களின் நண்பனாய் அறிமுகமாகி , என் நண்பியின் அன்பன் என்ற வகையில் இன்று எனக்கொரு நலன்விரும்பியாகவே ஆகியுள்ள ஓர் உண்மை இலக்கிய இரசனை வாதி,எனக்கொரு குட்டி அகராதி...

நல்ல நட்பும் கற்பு கொண்ட உத்தம உறவாம்.ஆங்கு பகிர்ந்து கொள்ள சொந்த சோகங்கள் - தனதாக்கி கொண்ட இன்பங்கள் இன்ன பிறவற்றை விட உயர் மட்ட ரசனைகளும் உள.அவற்றை பகிர்ந்து கொள்வதால் பெருகும் நட்பின் அன்னியோனிய ஆழம் உணரும் போதே புரிதலிற்கு இலகு.

இப்படித்தான் ஒருநாள் அவன் என்னை அவசரமாய் முகப் புத்தகத்தில் (?!) அழைத்து வேண்டிக் கொண்டது உன்னோடு சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது, முடியவில்லை,இருந்தாலும் முடிந்தால் நேரம் இருந்தால் எண்பதுகளில் வெளிவந்த பாலு மகேந்திராவின் "வீடு" பார்த்து விட்டு எனக்கொரு குரல் கொடு.
அவனிற்கான குரலே என்னுடைய இந்த பதிவு .

அன்று இரவே நான் “யு tube” சென்று "வீடு" தேடுதல் செய்தப் பொது சிக்கிய சின்ன வீடு,மாடி வீடு, இன்று வந்த ஆனந்தப் புறத்து வீடு எல்லாம் தாண்டி ஒரு மாதிரியாய் நிஜமான வீட்டை கண்டு பிடித்து பாகம் ஒன்று,பாகம் இரண்டு என்பவற்றை பதிவிறக்கம் செய்து,நள்ளிரவிற்கு முந்திய பொழுதுகளில் ரசனை தாகம் மேலிட உலர்ந்த நாவுடன்(!) உட்கார்ந்த போதுதான் என் மடிக்கணணி (செல்லப் பெயர்) தனது காதல் வைரஸ் பிரச்சினைகளை கூறி அழத் தொடங்கியது.
இப்படிப் பட்ட போராட்டங்களுடன் அப்படிப் பட்ட படத்தை பார்க்கவே கூடாது என முடிவு செய்து கணினியை நிறுத்தி வைத்தேன்,அனால் என் மனதின் வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறுத்தப் படாமலேயே.

அதனால் இருக்கும் அன்றாட வேலை- மனப் போராட்டம் - வாழ்கை வேட்டைகள் என்ற எல்லாவற்றிலும் முழுதாய் ஓர் நாள் கழிந்த நிலையிலும், மறு நாள் நீதி மன்ற வளாக சட்டத்தரணிகளை பின் தொடரும்(?) பயிற்சியில் இருந்து முன்னே வந்த பொழுதில் கடை கடையாக ஏறி இறங்கி ,இருக்கும் என நம்பிக்கை ஏற்படுத்திய ஓர் கடையிலும் உட்கார்ந்து,எழுந்து நானே தேடி எடுக்கச் செய்தது இந்த "வீடு".


சும்மாவா சொன்னார்கள்,கல்யாணம் செய்து பார்- வீட்டை கட்டி பார்!என்னத்தான் வாசித்து இருந்தாலும், இவ்வளவு தூரம் படித்து இருந்தாலும் இதற்குள் இப்படி ஓர் அர்த்தம் இருக்குமென பாலு மகேந்திராவின் கதையோட்டத்தை புசித்தப் பின் தான் புரிந்துக் கொண்டேன்.

இன்றைய உலகில் சிலருக்கு வீடு கட்டுவது சாதாரண மேட்டராகி விட்ட நிலையில் ,பலருக்கு வீடு என்பது அளவு-வர்ணம் என்பன மேலிட்ட அந்தஸ்தின் அங்கம் ஆகி விட்ட நிலையிலும் கூட,வீடு என்பது பார்க்கும் போது தோன்றும் சாதாரண கூரை-சிமெந்து-செங்கல் கலவை அல்ல. அதன் பின்னணியில் அவரவர் நிலவரம் பொறுத்து உள்ள ஓர் உணர்வுக் கலவையே ,இதை "வீடு" பார்த்து புரிந்துக் கொள்ளலாம் என்கிறேன்.


சுயநலமின்றி பொதுநலம் பகன்ற பாரதியே,

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
என உவந்து வேண்டுமளவு ஒவ்வாரு மனிதனுக்கும் முக்கியமானது வீடு. ஒவ்வாருவனுக்குள்ளும் ஒரு கனவு இல்லம் இருக்கிறது,சிலர் அதை கட்டி பார்த்தப் பின்னர் இறக்கின்றனர்.பலருக்கு அது பற்றிய கனவுடனே சுடலை பயணம். இதுதான் வாழ்க்கை.

இதுவும் அப்படியோர் வாழ்கை கதைத் தான்.


வீடு, இது எண்பத்து ஆறுகளில் வெளி வந்த பாலு மகேந்திராவின் எழுத்து,வசனம்,இயக்கத்தினாலான படம். நம் கிழக்கிலங்கையை பிறப்பிடமாக கொண்டு தென்னிந்தியாவினை புகலிடமாகக் கொண்ட மூன்றாம் பிறை, மூடு பனி போன்ற அற்புதமான யதார்த்த திரை படங்களை அளித்த இயக்குனர் பாலு மகேந்திராவை பற்றி நன் எடும் கூறத் தேவை இல்லை என்பது என் கருத்து.
தவிர இத்திரைப் படத்திற்கு ,
கதை- அகிலா மகேந்திரன்
தயாரிப்பு- கலா தாஸ்.படத்தின் சிறப்பமிசமே குதிரை பந்தயத்தின் சுவாரசியத்துக்கு ஒப்பிடப் படும் சிறுகதையின் பாத்திர அளவினை ஒத்த ஓர் சில பத்திர வார்ப்புகள்.கதையின் நாயகியாய் வீட்டை எழுப்பும் கதா நாயகி சுதா என்ற வேடத்தில் நடிகை அர்ச்சனா, நடிக்கிறார் என்றே குறிப்பிட முடியாதளவு பிரமிக்க வைக்கும் யதார்த்த நடிப்பு. படத்தின் பாத்திரங்களின் இயல்பான ஆடைதோற்றத்தில் லயித்தப் பின் ,எனக்கு வந்த சந்தேகம் எதற்கு படத்தில் ஒப்பனை இன்னார்,உடைகள் இன்னார்...என பேர் குறிப்பிடப் பட்டிருந்தது என்பதாம்.

கதாநாயகிக்கு தோல் கொடுக்கும் காதல் தோழன்,காவலனாய் விஜி என்ற கதாப் பத்திரத்தில் நடிகர் பானு சந்தர்.வெள்ளை ஜிப்பா, ஜோல்னா பையுடன் கொடுத்த வேடத்தை நிறைவு செய்து இருக்கிறார்.கதாநாயகியின் சுட்டி தங்கையாக வரும் பாத்திரம் ,புதுமை பித்தனின் பத்திர படைப்புகளில் சொல்லப் படும் அலமுவை ஒத்த ஒரு படைப்பு.வீடு ஒன்றை தேடி அவசரமாக நகர்ந்தாக வேண்டும் என்ற கட்டத்தில்,வீடு தேடி ஓயும் வேளையிலும் கூட,
"ஏய் கிழவா அப்புறம் பேச்ச மாத்தக் கூடாது,அந்த சின்ன ரூம் எனக்கு" என ரகளை பண்ணி ரசிக்க செய்கிறது.
இவர்களுடன் தாய் தந்தையை விபத்தில் இழந்த சுதா,தங்கை இருவருக்கும் முருகேஷ் தாத்தாவாய் வரும் சொக்கலிங்க பாகவதர் ,தனது பொக்கை வாயால் பாடி ,பாட்டு வாத்தியார் பணியை நிறைவு செய்திருக்கிறார்.சாகும் முன்னம் தன் பேத்தி கட்டி எழுப்பிய வீட்டை ஒரு தரம் பார்வை இட்டு ,அதை தவம் இருந்து பெற்ற பிள்ளை கணக்காய் தடவி பார்த்து,கண்ணிர் சொரிந்து,அவை காய்ந்து போகும் முன்னர் அவர் வாழ்கை கருகி போவது பார்ப்போர் நெஞ்சை தட்டும் கட்டம்.

இது எப்படி என்றால் "எண்பத்து நான்கு வயசில் கட்டின வீட்ட பார்த்துட்டு தானே யா நெறஞ்ச மனசோட செய்த்துருக்கார்"என்ற பானுசந்தரின் அர்ச்சனா மீதான ஆறுதல் உலக வாழ்க்கையின் போக்கை தெளிவு படுத்துகிறது.

மேல் சொன்ன கட்டத்தில் வீட்டை பார்வையிடும் போது அதற்கு பின்னணி சேர்க்கும் சந்தோஷ இசையிலாகட்டும், மற்று பிற பின்னணி இசையிலாகட்டும், பின்னணி இசையால் மேடையிட்டு அமர்ந்திருக்கிறார் மாஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்.இதில் எனது தனிப்பட்ட சந்தோஷத்திற்குரிய விடயம் வயலின் இசை எல்லா இடமும் பிரவகித்திருப்பதே.
இத்தனைக்கும் இது ஒரு பாடலேனும் இல்லாத படம் என்பது சிறப்மிசம். இது வார்த்தை வருணனைகளிற்கு அப்பால் பட்டது, உணர்ந்துதான் பாருங்களேன்.முக்கியமான மேலுரைத்த விடயங்களையும்,பாத்திரங்களையும் விட "ஏம்மா சின்னதா ஒரு வீடு நீயே கட்டிக்கலாமே" என பிள்ளையர் சுழி போடும் ஆபீஸ் சக ஊழியர், தொழில் வர்கத்தின் ஊழல் நிலை,வஞ்சக போர்வை, காமுக வெறி என்பவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டி குரல் கொடுக்கும் மங்கா பாத்திரம் என் கண்களில் ஒரு ஜான்சி ராணியே.உண்ணும் தொழிலுக்கே வேட்டு ஏற்படும் நிலையிலும் அப்படி தட்டிக் கேட்க தனி தில்லு வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

இப்படியாக இருக்கும் வீட்டை காலி பண்ண சொல்லி வரும் வக்கீல் நோட்டீசுடன் ஆரம்பிக்கும் படம்,வீடு தேடி நாய்களிற்கு பயந்து ஓடி,அதீத வாடகைகளால் வதைக்கப் பட்டு , இடையில் மூன்றாமர் மத்தியஸ்தத்தில் வீடு கட்டும் பணி ஆரம்பமாகி,மத்திய வர்க்கத்தின் சொந்த வீவீட்டிற்கான வேட்டை,அதுவும் பெண் ஒருத்தி தனித்து, சாதாரண பாதையில் முகிழ்த்திய வேட்டை ஜெயித்ததா, இல்லையா என்பதே இந்த வீடு.இதற்கிடையில் சமகத்தின் மாறுபட்ட மனிதர்களையும் திரைக்குள் ஒரு சில பத்திரங்களினூடே புகுத்தி, நடுத்தர வகுப்பு காதலின் ஊடலின் பின்னுள்ள காரணம்,அது முடியும் போதான சுகம் என்பவற்றையும் வெளிபடுத்தி பாலு மகேந்திரா முத்திரை பதித்துள்ளார்.


எங்கெங்கு காணினும் சக்தியடா கணக்கில் இன்று பரந்துள்ள நிர்வாகத்துறை ஊழலை அன்றே தன் கதைகுள் கச்சிதமாக காட்டி,காரண காரியங்கள் கொண்டு விளக்கி உள்ள பாங்கை பார்க்கும் போது எனக்கு அண்மையில் இலங்கையில் வெளி வந்த "மொண்டி அரச காணி சுவிகரிப்பு வழக்கின்" பின்னும் இருந்த இதே போன்ற ஓட்டையை நினைவு படுத்தியது. உண்மைத்தான் அரசிற்கு தான் அபிவிருத்தியை கொண்டு செல்லும் சுவிகரிப்பு பாதையில் எது போன்ற சாதாரண மனிதர்களது தனிப் பட்ட அபிவிருத்தி மூடப் படுவது அறிந்திருக்க நியாயமில்லையா? அன்றேல் நீதிக்கு தான் இடமில்லையோ?


எவ்வாறாயினும் ஒரு நல்ல இலக்கியத்துக்கும்,நல்ல படைப்பாளிக்கும் உள்ள சிறப்பமிசமானது முடிவை கதை எழக் காரணமாய் இருந்த,கதை எழுந்த சமூகத்திடமே விடுவதாகும்.அதிலும் பாலு மகேந்திரா வெற்றிப் பெற்றிருக்கிறார்ஆக நடுத்தர வர்க்கத்திற்கு கீழேயுள்ள சாதாரண வர்க்கத்திற்கு மட்டுமல்ல,நடுத்தர வர்க்கத்துக்குமே சரியான பாதையில் பயணிக்கும் போது வீடு விடை அற்ற கனவே,எம்மில் இன்னும் பலர் வீடு என்பது கனவாகவே.

உலகெங்குமுள்ள வீடற்ற மக்களிற்கு அர்ப்பணிக்கப் பட்ட வீடு நிஜத்தில் கலை பசி,சமுதாய வேட்கை தாகம் கொண்ட அனைவரும் தவற விட கூடாதது.-இவள் எனக்குள் ஒருத்தி-

1 comment: