Sunday, February 27, 2011

என் கேமரா கண்களில் பாலு மகேந்திராவின் "வீடு "- ஓர் பார்வை .............





அவனிற்கும் எனக்கும் இடையில் நிறைய ஒத்த ரசனைகள் , அவனது நயத்தல் திசை திரும்பும் திக்குகளில் உள்ள ஒவ்வொன்றும் எனக்கும் பிடித்தமானதாய் .அவன் எடுத்துக் கூறி நான் இரசித்த இன்னிசை பட்டியலோ பெரிது.
அவன் என் நண்பன்.
என் பீட நண்பர்களின் நண்பனாய் அறிமுகமாகி , என் நண்பியின் அன்பன் என்ற வகையில் இன்று எனக்கொரு நலன்விரும்பியாகவே ஆகியுள்ள ஓர் உண்மை இலக்கிய இரசனை வாதி,எனக்கொரு குட்டி அகராதி...

நல்ல நட்பும் கற்பு கொண்ட உத்தம உறவாம்.ஆங்கு பகிர்ந்து கொள்ள சொந்த சோகங்கள் - தனதாக்கி கொண்ட இன்பங்கள் இன்ன பிறவற்றை விட உயர் மட்ட ரசனைகளும் உள.அவற்றை பகிர்ந்து கொள்வதால் பெருகும் நட்பின் அன்னியோனிய ஆழம் உணரும் போதே புரிதலிற்கு இலகு.

இப்படித்தான் ஒருநாள் அவன் என்னை அவசரமாய் முகப் புத்தகத்தில் (?!) அழைத்து வேண்டிக் கொண்டது உன்னோடு சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது, முடியவில்லை,இருந்தாலும் முடிந்தால் நேரம் இருந்தால் எண்பதுகளில் வெளிவந்த பாலு மகேந்திராவின் "வீடு" பார்த்து விட்டு எனக்கொரு குரல் கொடு.
அவனிற்கான குரலே என்னுடைய இந்த பதிவு .

அன்று இரவே நான் “யு tube” சென்று "வீடு" தேடுதல் செய்தப் பொது சிக்கிய சின்ன வீடு,மாடி வீடு, இன்று வந்த ஆனந்தப் புறத்து வீடு எல்லாம் தாண்டி ஒரு மாதிரியாய் நிஜமான வீட்டை கண்டு பிடித்து பாகம் ஒன்று,பாகம் இரண்டு என்பவற்றை பதிவிறக்கம் செய்து,நள்ளிரவிற்கு முந்திய பொழுதுகளில் ரசனை தாகம் மேலிட உலர்ந்த நாவுடன்(!) உட்கார்ந்த போதுதான் என் மடிக்கணணி (செல்லப் பெயர்) தனது காதல் வைரஸ் பிரச்சினைகளை கூறி அழத் தொடங்கியது.
இப்படிப் பட்ட போராட்டங்களுடன் அப்படிப் பட்ட படத்தை பார்க்கவே கூடாது என முடிவு செய்து கணினியை நிறுத்தி வைத்தேன்,அனால் என் மனதின் வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறுத்தப் படாமலேயே.

அதனால் இருக்கும் அன்றாட வேலை- மனப் போராட்டம் - வாழ்கை வேட்டைகள் என்ற எல்லாவற்றிலும் முழுதாய் ஓர் நாள் கழிந்த நிலையிலும், மறு நாள் நீதி மன்ற வளாக சட்டத்தரணிகளை பின் தொடரும்(?) பயிற்சியில் இருந்து முன்னே வந்த பொழுதில் கடை கடையாக ஏறி இறங்கி ,இருக்கும் என நம்பிக்கை ஏற்படுத்திய ஓர் கடையிலும் உட்கார்ந்து,எழுந்து நானே தேடி எடுக்கச் செய்தது இந்த "வீடு".


சும்மாவா சொன்னார்கள்,கல்யாணம் செய்து பார்- வீட்டை கட்டி பார்!என்னத்தான் வாசித்து இருந்தாலும், இவ்வளவு தூரம் படித்து இருந்தாலும் இதற்குள் இப்படி ஓர் அர்த்தம் இருக்குமென பாலு மகேந்திராவின் கதையோட்டத்தை புசித்தப் பின் தான் புரிந்துக் கொண்டேன்.

இன்றைய உலகில் சிலருக்கு வீடு கட்டுவது சாதாரண மேட்டராகி விட்ட நிலையில் ,பலருக்கு வீடு என்பது அளவு-வர்ணம் என்பன மேலிட்ட அந்தஸ்தின் அங்கம் ஆகி விட்ட நிலையிலும் கூட,வீடு என்பது பார்க்கும் போது தோன்றும் சாதாரண கூரை-சிமெந்து-செங்கல் கலவை அல்ல. அதன் பின்னணியில் அவரவர் நிலவரம் பொறுத்து உள்ள ஓர் உணர்வுக் கலவையே ,இதை "வீடு" பார்த்து புரிந்துக் கொள்ளலாம் என்கிறேன்.


சுயநலமின்றி பொதுநலம் பகன்ற பாரதியே,

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
என உவந்து வேண்டுமளவு ஒவ்வாரு மனிதனுக்கும் முக்கியமானது வீடு. ஒவ்வாருவனுக்குள்ளும் ஒரு கனவு இல்லம் இருக்கிறது,சிலர் அதை கட்டி பார்த்தப் பின்னர் இறக்கின்றனர்.பலருக்கு அது பற்றிய கனவுடனே சுடலை பயணம். இதுதான் வாழ்க்கை.

இதுவும் அப்படியோர் வாழ்கை கதைத் தான்.


வீடு, இது எண்பத்து ஆறுகளில் வெளி வந்த பாலு மகேந்திராவின் எழுத்து,வசனம்,இயக்கத்தினாலான படம். நம் கிழக்கிலங்கையை பிறப்பிடமாக கொண்டு தென்னிந்தியாவினை புகலிடமாகக் கொண்ட மூன்றாம் பிறை, மூடு பனி போன்ற அற்புதமான யதார்த்த திரை படங்களை அளித்த இயக்குனர் பாலு மகேந்திராவை பற்றி நன் எடும் கூறத் தேவை இல்லை என்பது என் கருத்து.
தவிர இத்திரைப் படத்திற்கு ,
கதை- அகிலா மகேந்திரன்
தயாரிப்பு- கலா தாஸ்.







படத்தின் சிறப்பமிசமே குதிரை பந்தயத்தின் சுவாரசியத்துக்கு ஒப்பிடப் படும் சிறுகதையின் பாத்திர அளவினை ஒத்த ஓர் சில பத்திர வார்ப்புகள்.கதையின் நாயகியாய் வீட்டை எழுப்பும் கதா நாயகி சுதா என்ற வேடத்தில் நடிகை அர்ச்சனா, நடிக்கிறார் என்றே குறிப்பிட முடியாதளவு பிரமிக்க வைக்கும் யதார்த்த நடிப்பு. படத்தின் பாத்திரங்களின் இயல்பான ஆடைதோற்றத்தில் லயித்தப் பின் ,எனக்கு வந்த சந்தேகம் எதற்கு படத்தில் ஒப்பனை இன்னார்,உடைகள் இன்னார்...என பேர் குறிப்பிடப் பட்டிருந்தது என்பதாம்.

கதாநாயகிக்கு தோல் கொடுக்கும் காதல் தோழன்,காவலனாய் விஜி என்ற கதாப் பத்திரத்தில் நடிகர் பானு சந்தர்.வெள்ளை ஜிப்பா, ஜோல்னா பையுடன் கொடுத்த வேடத்தை நிறைவு செய்து இருக்கிறார்.கதாநாயகியின் சுட்டி தங்கையாக வரும் பாத்திரம் ,புதுமை பித்தனின் பத்திர படைப்புகளில் சொல்லப் படும் அலமுவை ஒத்த ஒரு படைப்பு.வீடு ஒன்றை தேடி அவசரமாக நகர்ந்தாக வேண்டும் என்ற கட்டத்தில்,வீடு தேடி ஓயும் வேளையிலும் கூட,
"ஏய் கிழவா அப்புறம் பேச்ச மாத்தக் கூடாது,அந்த சின்ன ரூம் எனக்கு" என ரகளை பண்ணி ரசிக்க செய்கிறது.








இவர்களுடன் தாய் தந்தையை விபத்தில் இழந்த சுதா,தங்கை இருவருக்கும் முருகேஷ் தாத்தாவாய் வரும் சொக்கலிங்க பாகவதர் ,தனது பொக்கை வாயால் பாடி ,பாட்டு வாத்தியார் பணியை நிறைவு செய்திருக்கிறார்.சாகும் முன்னம் தன் பேத்தி கட்டி எழுப்பிய வீட்டை ஒரு தரம் பார்வை இட்டு ,அதை தவம் இருந்து பெற்ற பிள்ளை கணக்காய் தடவி பார்த்து,கண்ணிர் சொரிந்து,அவை காய்ந்து போகும் முன்னர் அவர் வாழ்கை கருகி போவது பார்ப்போர் நெஞ்சை தட்டும் கட்டம்.

இது எப்படி என்றால் "எண்பத்து நான்கு வயசில் கட்டின வீட்ட பார்த்துட்டு தானே யா நெறஞ்ச மனசோட செய்த்துருக்கார்"என்ற பானுசந்தரின் அர்ச்சனா மீதான ஆறுதல் உலக வாழ்க்கையின் போக்கை தெளிவு படுத்துகிறது.

மேல் சொன்ன கட்டத்தில் வீட்டை பார்வையிடும் போது அதற்கு பின்னணி சேர்க்கும் சந்தோஷ இசையிலாகட்டும், மற்று பிற பின்னணி இசையிலாகட்டும், பின்னணி இசையால் மேடையிட்டு அமர்ந்திருக்கிறார் மாஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்.இதில் எனது தனிப்பட்ட சந்தோஷத்திற்குரிய விடயம் வயலின் இசை எல்லா இடமும் பிரவகித்திருப்பதே.
இத்தனைக்கும் இது ஒரு பாடலேனும் இல்லாத படம் என்பது சிறப்மிசம். இது வார்த்தை வருணனைகளிற்கு அப்பால் பட்டது, உணர்ந்துதான் பாருங்களேன்.







முக்கியமான மேலுரைத்த விடயங்களையும்,பாத்திரங்களையும் விட "ஏம்மா சின்னதா ஒரு வீடு நீயே கட்டிக்கலாமே" என பிள்ளையர் சுழி போடும் ஆபீஸ் சக ஊழியர், தொழில் வர்கத்தின் ஊழல் நிலை,வஞ்சக போர்வை, காமுக வெறி என்பவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டி குரல் கொடுக்கும் மங்கா பாத்திரம் என் கண்களில் ஒரு ஜான்சி ராணியே.உண்ணும் தொழிலுக்கே வேட்டு ஏற்படும் நிலையிலும் அப்படி தட்டிக் கேட்க தனி தில்லு வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

இப்படியாக இருக்கும் வீட்டை காலி பண்ண சொல்லி வரும் வக்கீல் நோட்டீசுடன் ஆரம்பிக்கும் படம்,வீடு தேடி நாய்களிற்கு பயந்து ஓடி,அதீத வாடகைகளால் வதைக்கப் பட்டு , இடையில் மூன்றாமர் மத்தியஸ்தத்தில் வீடு கட்டும் பணி ஆரம்பமாகி,மத்திய வர்க்கத்தின் சொந்த வீவீட்டிற்கான வேட்டை,அதுவும் பெண் ஒருத்தி தனித்து, சாதாரண பாதையில் முகிழ்த்திய வேட்டை ஜெயித்ததா, இல்லையா என்பதே இந்த வீடு.இதற்கிடையில் சமகத்தின் மாறுபட்ட மனிதர்களையும் திரைக்குள் ஒரு சில பத்திரங்களினூடே புகுத்தி, நடுத்தர வகுப்பு காதலின் ஊடலின் பின்னுள்ள காரணம்,அது முடியும் போதான சுகம் என்பவற்றையும் வெளிபடுத்தி பாலு மகேந்திரா முத்திரை பதித்துள்ளார்.






எங்கெங்கு காணினும் சக்தியடா கணக்கில் இன்று பரந்துள்ள நிர்வாகத்துறை ஊழலை அன்றே தன் கதைகுள் கச்சிதமாக காட்டி,காரண காரியங்கள் கொண்டு விளக்கி உள்ள பாங்கை பார்க்கும் போது எனக்கு அண்மையில் இலங்கையில் வெளி வந்த "மொண்டி அரச காணி சுவிகரிப்பு வழக்கின்" பின்னும் இருந்த இதே போன்ற ஓட்டையை நினைவு படுத்தியது. உண்மைத்தான் அரசிற்கு தான் அபிவிருத்தியை கொண்டு செல்லும் சுவிகரிப்பு பாதையில் எது போன்ற சாதாரண மனிதர்களது தனிப் பட்ட அபிவிருத்தி மூடப் படுவது அறிந்திருக்க நியாயமில்லையா? அன்றேல் நீதிக்கு தான் இடமில்லையோ?


எவ்வாறாயினும் ஒரு நல்ல இலக்கியத்துக்கும்,நல்ல படைப்பாளிக்கும் உள்ள சிறப்பமிசமானது முடிவை கதை எழக் காரணமாய் இருந்த,கதை எழுந்த சமூகத்திடமே விடுவதாகும்.அதிலும் பாலு மகேந்திரா வெற்றிப் பெற்றிருக்கிறார்ஆக நடுத்தர வர்க்கத்திற்கு கீழேயுள்ள சாதாரண வர்க்கத்திற்கு மட்டுமல்ல,நடுத்தர வர்க்கத்துக்குமே சரியான பாதையில் பயணிக்கும் போது வீடு விடை அற்ற கனவே,எம்மில் இன்னும் பலர் வீடு என்பது கனவாகவே.

உலகெங்குமுள்ள வீடற்ற மக்களிற்கு அர்ப்பணிக்கப் பட்ட வீடு நிஜத்தில் கலை பசி,சமுதாய வேட்கை தாகம் கொண்ட அனைவரும் தவற விட கூடாதது.



-இவள் எனக்குள் ஒருத்தி-

Monday, February 14, 2011

2011 இன் முதல் பதிவு என் முதல் கடவுளுக்கு ....

என் அவள் .....











என் வாழ்வின்
சில
அரிதான நிமிடங்கள்
அவளின் அண்மையிலேயே.

அடிக்க
அணைக்க
அன்புக் கட்ட
அவளே அரிதாரம்.


இடை வரும் உறவுகளால்
நம் நிலை மாறலாம்
எந்நிலையிலும்
தன் நிலை மாறாதவள் அவள்.


தன்னுயிரால் என்னுயிர் தந்ததட்கன்று
தன்னினும் மேலான அக்கறை
தருவதாலேயே
அவள் நேர் நின்ற தெய்வம்.

அடித்ததற்காய்
திட்டியதற்காய்
அவள் அன்பிலும்
குறையிங்கு இல்லை.

எது வந்த போதும்
கலங்காது
கருணை சிந்த
தரணி வந்த தாரகையும் அவளே.

என்றும்
தேய்ந்து வளரும் நிலவாய்
வளர்ந்து பெருகும்
மக்கள் நம் அன்பு.


நன்றி செலுத்த
அவள் அன்பு
இங்கு
கடனிற்குரியதன்று.


ஈடு செய்ய
அவளோ
எனக்கு
எவளோ ஒருத்தி அல்ல.

என்னுள் இருப்பவள்
என்னை புரிந்தவள்
அறிவாள்
என் மனம்.

அதில் அன்னை அவள் அன்றி வேறு யாருண்டு என்றே!




என்றும்
அவளிற்காய் இவள்
எனக்குள் ஒருத்தி.

Saturday, January 1, 2011

என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2011 .






கழிந்தது ஒரு வருடம்,இதோ இன்னுமோர் மறு வருடம்,புது வருட மாய்.சரியாய் மணி பன்னிரண்டு பார்த்து புது வருட வாழ்த்து தனை நண்பர்,அன்பர்களிற்கு பகிர்ந்து,புதுவருட பட்டாசு கொளுத்தி, வான வேடிக்கை பார்த்து,மறுநாள் காலை கோவில் தரிசனம் செய்தல் என்பவற்றுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாது,அந்த மகிழ்வு உற்சாகத்தை வருடம் முழுதும் அதே போல் கொண்டு கழிக்க என் வாழ்த்துக்கள்.

அறிவுரை சொல்வது மிக இலகுவானது,அதை பின்பற்றுவதே கடினம் என்பது நான் மட்டும் அறியாதது அல்ல,நான் உட்பட அனைவருமே புது வருட முதல் நாளில் அதை செய்ய வேண்டும்,இதை செய்ய வேண்டும்,இந்த வருடத்தில் இதை படித்தே தீர வேண்டும்,செய்தே முடிக்க வேண்டும் என பட்டியல் இட்டு பின் அதில் ஒன்றை கூட முடிக்காமலே அதே பட்டியலுடன் அடுத்த வருடத்தை எதிர்க் கொள்ளுவது இயல்பாகி விட்டது.இதை இயற்கை என்று கவனயீனமாய் விடாது, இயலாமை என மனம் துவளாது,எதையும் அதிக உயரத்துடன் எதிர் பார்த்து முயன்று கொண்டே இருந்தால் அதில் ஒன்றாவது அடையாமல் இருக்கப் போவது இல்லை.இப்படி சொல்லும் போது தான் எனக்கு "நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதோ...." என்ற சினிமா வரிகள் நினைவுக்கு வருகின்றன.

சென்ற வருடம் நீங்கள் சாதித்த விடயங்கள் எவை? விரும்பி செய்த விடயங்கள் எவை? என்பவற்றை குறித்து அது தொடர்பானவற்றில் இந்த வருடம் அதிக கவனம் செலுத்தி அனுகூலங்களை பெறுவதனுடன், கடந்த வருடத்தில் எது குறித்து அதிகம் துன்புற்றீர்களோ ,எது பற்றி அதிக பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்தீர்களோ அவை தொடர்பில் அவதானமுடன்,ஆழம் பார்த்து இந்த வருடத்தில் நடந்து கொண்டு நன்மைகள் பல பெற என் பிரார்த்தனைகள்.

வாழ்க்கை ரோஜா மேல் படுக்கை அன்று அல்ல என்பது நான் கூறி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று அல்ல,அண்மையில் நான் வாசித்த சஞ்சிகை ஒன்று மனிதனுக்கு துன்பங்கள் நேருவதற்கான காரணங்கள் என இரண்டை சுட்டி காட்டி இருந்தது. அதாவது ஒன்று கடவுளை நினைவு படுத்திக் கொள்ள,மற்றயது நாம் பிழையான திசை நோக்கி பயணிக்க முற்படும் போது எம்மை சரியான வழிக்கு ஆற்றுப் படுத்த என்பன அவை.இனி துன்பம் வந்தால் துவளாது அவற்றுக்கு நன்றி கூறி ,எது நடந்தாலும் எல்லாவற்றுக்கும் ஓர் காரணம் உண்டென நம்பி செய்யும் எல்லா காரியங்களும் ஜெயமாகட்டும்.

நானும் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் இந்த புதிய வலைபூ தளத்தை எழுத ஆரம்பித்தேன், ஆனால் பல்கலை கழக வாழ்வின் பரபரப்புகள், பரீட்சைகளின் படபடப்புகளில் சிக்குண்டு பெரிதாய் செய்ய நினைத்து ஓர் சிறிதேனும் செய்ய முடிந்ததற்கு மகிழ்ந்து,இந்த வருடத்தில் நல்ல நேர முகாமைத்துவத்துடன் ,எழுத தூண்டும் அருமையான மன நிலையுடன் அதிகம் எழுத வேண்டும் என்றும், எல்லாவற்றுக்கும் மேலே சித்திரம் வரைய தேவையான சுவரான நம் தேகம் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என்றும் ஆவல் கொண்டு விடைப் பெறுகிறேன்



மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....!!!



இவள்,
எனக்குள் ஒருத்தி.

Saturday, September 25, 2010

என்னை விரும்பும் ஒருவன்.......................





மார்பிற்கு குறுக்காக அணைத்திருந்த நான்கைந்து புத்தகங்களை இறுகப் பற்றிய கரங்களுடன், வீசிடும் காற்றுடன் வெற்றிப் போர் புரியும் காதோர கூந்தல் கற்றை அடிக்கடி காது மடல்களின் பின் இருத்தி விட முனையும் விடாத முயற்சியுடனும் , எங்கே போகிறோம் என்ற இலக்கில்லாத நடையுடனும் நடந்து கொண்டிருந்தாள் அபி. பார்ப்பதற்கு அழகாக ,அமைதியாகவும் பழகினால் அதற்கு புறம்பாய் சுட்டித் தனமாகவும் , படிப்பில் கெட்டிக்காரியுமான அபி என்கிற அபிரா தற்போது வெற்றிகரமாக இரண்டு வருடங்களை கடந்து மூன்றாமாண்டில் இருக்கும் ஒரு பல்கலைகழக மாணவி.







இந்நேரத்தில் விரிவுரையில் இருக்க வேண்டியவள் விரிவுரை விட்டு, ஏன் பீட வளாக எல்லையை விட்டே தூர விலகி ஓடிக் கொண்டிருந்தாள். விரிவுரைகளில் லயிக்கும் மனம் இப்போது அவளிற்கில்லை, ஏன் மனமே அவளிடம் இல்லை. தன்னுடைய பீட வளாகத்தில் இருக்கும் வரை காணும் காட்சிகள், செல்லும் இடங்கள் யாவும் நடந்ததையே நினைவு படுத்தும் என்பதால், வழமையாக மற்ற பீடங்களின் வழி கூட பயணிக்காதவள் இன்று அவற்றின் வழியே நடந்துக் கொண்டிருந்தாள்.


வீசும் காற்று,பச்சை புற்தரை, தம் இரு கரங்களின் பிணைப்பால் குடை விரித்த காதல் மர ஜோடிகள்,உயர்ந்து நின்ற நூலகம்,அதன் ஓரமாய் உயரம் பாயும் போட்டி நடாத்திக் கொண்டிருந்த அணில்கள்,எதுவும் இன்று அவள் ரசனைக்கு உகந்தனவாயிருக்கவில்லை.அழுதழுது வறண்டு போன விழிகளிற்கு எல்லாம் பாலைவனமாக மட்டுமே.

ஏன் எப்படி? எதுவுமே நிலையில்லையா?உறவுகளே பிரியத்தான் என்றிருக்கலாம்.ஆனால் நமக்கிடையிலான பிரிவு இத்தனை சீக்கிரத்திலா? எதையும் சரியாய் கவனித்து தேர்ந்தெடுக்க தெரிந்த கெட்டிக்காரி என மற்றவர்கள் அவளை எடை போட்டது எவ்வளவு தவறானது.இன்று தவறான தெரிவால்,ஏமார்ந்து,மனதையும் வருத்தி இப்படி அங்கும் இங்குமாய் அலைய வேண்டியுள்ளதே என தன் அலை பாய்ந்திட்ட மனதை திட்டிக் கொண்டவள், கன்னக் கதுப்புகளில் படிந்த கண்ணீர்த் துளிகளை யாரும் பார்க்க முன் துடைக்க முனைந்த போதுதான் அது நடந்தது.


"ஹாய் அபி..."என ராகமாய் தன் பெயரை நீட்டி முழக்கியவளை இது கௌஷி என இனம் கண்டு நிமிர்ந்திட முற்பட்ட போது தான் அவர்கள் நெற்றியும் நெற்றியும் கை குலுக்கி கொண்டன. தன் நெற்றியோரத்தை வருடியப் படி சமாளிக்க முற்பட்டவளை "அடடா ராம் இல்லாமல் தனியாய் நடந்தால் இப்போதெல்லாம் உன் பார்வை கூட கோளாறு போல இருக்கே,ஒஹ் மறந்திட்டேனே,காதல் தான் குருடாச்சே....ஏய் ராமை கேட்டதை சொல்..." என தானே கேள்வியும் பதிலுமாய் கடந்து போனாள் அந்த கெளசல்யா.எப்பொழுதும் அவள் இப்படித்தான்.பகுதி நேர தொழிலையும் செய்து கொண்டு படிப்பதால் இவள் இருந்திருந்து தான் விரிவுரைக்கு வருவதே. ஏதோ சக நண்பர்களது கையொப்ப திறமையால் இரண்டு வருடங்களும் சமூகமளிப்பிற்கான தகைமையை காட்டி பரீட்சை எழுதி விட்டாள்.பொதுவாக நண்பிகள் இவளை "விசிடிங் ஸ்டுடென்ட்" என்று தான் அழைப்பார்கள். அதனால் தான் அவள் நடந்தது எதுவும் தெரியாது ராமை பற்றி அபியிடம் விசாரிக்கிறாள். நடந்தவற்றை பின்னர் அறியும் போது வருத்தப் படக் கூடும். ஆனால் இங்குள்ள பெரிய எட்டாவது அதிசயம் மற்ற மாணவர்வர்களது அன்றாட தொலைபேசி அரட்டை பதிவுகளில் இதை தவற விட்டது தான், என எண்ணிக் கொண்டவள் கண்களில் உயர்ந்து வளர்ந்து கிளைகளால் கூரை போட்ட மரத்திற்கும் , புற் தரைக்கும் இடையே எழுப்ப பட்டிருந்த கல் இருக்கை படவே ,ஒன்றில் அமர்ந்து கொண்டாள்.


இந்த ஒதுக்குபுரமா ன இடத்திற்கு இவளை தேடி வந்து இப்போதைக்கு யாரும் தொல்லை தரப் போவதில்லை என்ற தெம்பில், தனிமை கிடைத்து விட்ட திருப்தியில் அதுவரை அணைத்திருந்த புத்தகங்களை அருகே வைத்தாள். சுற்றும் முற்றும் ஓடிய அவளின் அந்த பார்வை அவள் எதையோ தொலைதிருந்ததை பறை சாட்டின.

பச்சை பசேலென பூங்கா போல் இல்லாவிட்டாலும் கூட , பூங்காவுள் இருக்கும் உணர்வை தரத் தக்க ரம்யமான சூழல், மரங்கள்,பறவைகள்,தவிர பல கல் இருக்கைகள் இவற்றை எந்த நோக்கத்தில் பல்கலைகழக கட்டுமாணிகள் நிர்மாணித்தார்களோ, ஆனால் வழக்காற்று சம்பிரதாயமாய் இவை காதலர்கட்கு இல்லை என்றால் ஜோடிகட்கு சொந்தமென உரித்து எழுதப் பட்டு இருந்தது. காதல் வந்தாலே தனித்து ஒதுங்கி , நண்பர்களது
இடையீடின்றி அவளை அவனும், அவனை அவளும் அறியத் துடிக்கும் பல்கலை காதல் ஜோடிகளிற்கான பூர்வீக சொத்து இது ஒன்றுதான்.





இப்போதும் இரு இருக்கைகளை தவிர மற்ற இருக்கைகள் எல்லாம் காதல் ஜோடிகளால் அலங்கரிக்கப் பட்டு இருந்தன.அப்படி என்ன கதைப்பார்களோ முடிவற்ற சம்பாஷணை தான். பொதுவாக இருவருக்கே உரித்தான இருக்கைகளில் அங்கு அவள் தனித்து அமர்ந்து இருப்பது மற்றவர் பார்வைக்கு வேடிக்கையாகவும்,விநோதமாயும் இருக்கும் என்பதை அவள் அறிவாள்.காதல் வந்தாலே காக்கையும் தன்னை கவனிப்பதாக காதலர்களிற்கு தோன்றும் என்ற வைரமுத்து வரிகள் நடைமுறை உண்மை ஆயின் ஏன் இவர்களிற்கு மட்டும் மற்றவர்களின் பார்வைகள் புரிவதே இல்லை? எண்ணியவள் .......அவன் ஆவலுடன் காதல் கொண்ட காலங்களில் இப்படியெல்லாம் இருப்பதை விரும்பாததையும் ,அதை ராமும் ஏற்று நடந்ததையும்,அவள் அவனை கொண்டாடியதையும் நினைத்துப் பார்த்தாள்.


ராம்......





நீதான் எத்தனை அன்பாக இருந்தாய்? அக்கறை காட்டினாய்? சந்தித்த ஆண்கள், சிந்தித்துப் பார்த்த ஆண்கள் என எல்லோர்க்கும் மேலாக என் எதிர்பர்ப்புகளிற்கு ஏற்றவனாக இருந்தாயே.......நண்பனாக இருந்த காலத்திலும் சரி, காதலனாய் ஆன பின்பும் சரி,எத்தனை உத்தமமாய் நடந்துக் கொண்டாய் ? சராசரி காதல் ஜோடிகள் அல்ல என உன் யோக்கியமான நடத்தையினால் நல்ல பெயர் வாங்கியது எல்லாம் என்று பொய்த்து விட்டதே!எப்படி? ஒரு காலத்தில் நான் செய்யும் எல்லாம் உனக்கு பிடிப்பதால் என்னை பிடிப்பதாக கூறிய உனக்கு, இன்று மட்டும் ஏன் என்னை,என் செயல் எதையுமே பிடிக்காமல் போனது?மாறியது நான் அல்லவே ராம்,உன் பார்வைதான்.எண்ணங்கள் அலை மோதி அவள் மனக் கவலையை கூட்டிய போது ,அது வரை அடக்கிய கண்ணீர் துளிகள் கண்மடல் தாழ் திறந்து,வெளி வந்து ஆர்பரித்தன.அருகே இருந்த ஜோடிகளிற்கு தன் விசும்பல் ஒலி ஏன் இடையூறாக வேண்டும் என அதை கைகுட்டையால் தடை போட முனைந்தவள்,கை குட்டையை கூட அவனிற்கு பிடித்த நீல வானின் நிறத்தில் பாவித்ததை நினைவு கூர்ந்து ராம் பற்றிய அந்த நினைவுகளுள் அடங்கிப் போனாள்,அபி.



அது பல்கலை கழகங்களிற்கு இனிய காலம் என்றால், அவளது பீடத்திற்கு பூமாலை பொழியும் வசந்த கலாம்.புதிய மாணவர்கள் அனுமதியில் தான் ஏதோ தன் வாழ்வே தங்கியுள்ளதை போல் சுற்றி திரியும் சில ஆண் சீனியர் கூட்டமும் , தாம் வாங்கியதை அப்படியே கொடுத்து விட துடிக்கும் பரம்பரைகளாக சேட்டைகளிற்கு தயாராக இருக்கும் பெண் சீனியர் கூட்டமும் என கலை கட்டும் அத் தருணத்தில் தான் புத்தம் புதிய இலக்குகள்,கனவுகளுடன் புது மாணவியாக அந்த பீட வளாக பூமியில் தன் பாதத்தை பதித்தாள் அபி. பெரிதாய் பகிடிவதை தன் பீடத்தில் நிலவுவதில்லை என தெளிவாய் கூறப் பட்டு இருந்தாலும் சேட்டைகளும் ,கிண்டல்களும் இல்லாமல் இருக்கப் போவதில்லையே என்ற பயத்துடன்,உறு துணைக்கு தன் பள்ளியில் இருந்து தன்னுடனே தெரிவான மயூரியுடன் உள்ளே நுழைந்தவளை இடை மறித்தான் அவன்.

பார்த்தவுடனே தோன்றும் காதலில் அவளிற்கும் உடன்பாடு இல்லை அத்துடன் ராமை பார்த்தவுடனேயே அவளிற்கு காதல் தோன்றவும் இல்லை.தூரத்தே பத்து பத்து பெண்கள் குழுமி நின்றனர் . அந்த அதிகார தோற்றம் ,அவர்கள் சீனியர் தெய்வங்களே எனத் தெளிவாய் உரைத்தன.அவர்கள் ஏதேதோ கூறி கைதட்டி,சிரித்து அவனை வழியனுப்ப,அவன் நேரே இவர்கள் இருவர் முன்னும் வந்து நின்றான்.





"ஹாய் ...........நீங்களும் பர்ஸ்ட் இயர் தான?ராகிங் வாங்கியாச்சா? இல்லை எங்களோடு சேர்ந்து தானா?"என கேட்க ,அவன் ஏதோ நினைத்தவன் முகத்தில் நாற்பது வோட்ஸ் பிரகாசம் காட்டி," ஆமாம்...ஆம்ம்..."என தலையாட்டி வைத்தான். அதற்குள் சீனியர்களை அடைந்து இருக்கவே அவர்கள் "என்ன ராம்....ஜூனியர்ஸ் என்ன சொல்றாங்க?."என கேட்க கூட்டம் மீண்டும் ஆர்பரித்தது.அதன் பின் அவன் அங்கிருந்து நழுவ ,இவர்களிற்கான விசேட உபசரிப்புகளில் மூழ்கிப் போனார்கள். இப்படி ஆரம்பமான அவனுடனான நட்பு, பின்னாளில் ஜூனியர் அல்ல சீனியர் என தெரிய வந்த பின்னும் கூட முதன் முதலாய் வந்த நட்புணர்வே மேலோங்கி நின்றது.


வழமையான சீனியர்-ஜூனியர் உறவிலிருக்கும் சந்திப்புகள்,பாட கேள்விகளிற்கான விளக்கங்கள்,சிறிய உதவிகள்,அதற்கான பெரிய நன்றி நவில்தல்கள் என்பன கடந்து ,நண்பர்களாய் உறவாடும் உன்னத உறவு அபிக்கும் ராமிற்கும் இடையே வளர்ந்திருந்தது.துடுக்குத்தனமும் அளவிலா பேச்சும் என உற்சாக பேர் வழியான அபிக்கு அவள் பீடமே நண்பர்கள் என்றால் நண்பர்களுள் நண்பனாய் ராம் என்பதை விட பெரிதாய் எதுவும் இருக்கவில்லை.ஆனால் எல்லோருடனும் பழகும் ,எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அபிக்கு,ராம் அதிகமாய் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான். அவளுடன் அதிகமாக நேரத்தை கழித்தான்.மற்றவர்கள் பார்வை கேள்வியாய் உயர்ந்த போதும்,அபி அதை பொருட்படுத்த வில்லை.






இவற்றுக்கு முடிவாக ராம், அவனது பிறந்த நாளில் தனக்கான பரிசாய் அவள் மனதை தரும் படி கேட்ட து போதுதான் அபி இது பற்றி சிந்திக்க அரம்பிக்கலானாள். பிறந்த நாளன்று அவன் மனம் புண்ணாவதை விரும்பா சகியாய் மௌனம் சாதித்தாள்.அந்த அவகாசத்தை அவள் அவனது எதிர்காலத்திற்கு அவசியமானவள் என புரிய வைக்க பயன்படுத்தி கொண்டான்.கண்டதும் காதலே வெறும் ஈர்ப்பு,ஈற்றில் ஏமாற்றம், இங்கு நெடு நாளைய நட்பும், நிறைந்த அன்புமே மேலோங்கி நின்றதால் இருவர் மனமும் ஒன்றாகி போயின.


பல்கலை கழகக் காதல் என்றாலேயே பட்டாம்பூச்சியாய் சிறகடித்து, அதன் வாழ்கையை சீக்கிரமே முடித்துக் கொள்ளும் என்ற பொதுவான அபிப்ராயத்தை தவிடாக்கி , காதலர்கள் என்றாலும் தனித்தேயிராது , எல்லோருடனும் சகஜமான நட்பை பேணி, பண்பாய் நடந்து ,அபியும் ராமும் மற்ற மாணர்வர்களின் உதாரண ஜோடிகளாக ஒன்றரை வருடங்களாக இணைந்திருந்தனர்.பிரச்சினைகளற்று சீராக ஓடிக் கொண்டிருந்த தன் காதல் நதி ,பல்கலை காலம் முடிவுற மணவாழ்வு எனும் சகரத்துள் ,பெற்றோர் ஆசியுடன் இணையுமென்ற நம்பிக்கையில், கனவில் திளைத்துக் கொண்டிருந்த அபி,நனவில் நிலைத்தப் போது இறுதியாண்டில் இருந்த ராம் சிலகாலமாக புதியவனாகிக் கொண்டிருந்தான்.





இதுவரை தான் படித்து சென்ற நாவலில் முக்கால் பாகத்தில் ,புது தலைப்பு இடப் பட்டு ,புது கதை ஆரம்பமானதை போல் தவிப்பாய் ,பயமாய் நோக்கினாள் அபி. இறுதியாண்டு முடிய ,இன்னும் சில காலத்தில் சமூகத்துடன் பொறுப்பான அங்கமாக மாறவுள்ள ராம்,தானும் ஒரு பக்குவமான மனிதனாக இப்போது யோசிப்பதாயும், இரசிப்பதற்கு நன்றாயிருக்கும் சில விடயங்கள்,நடைமுறை வாழ்விற்கென வரும் போது எந்தளவு பொருத்தமாகும் என எண்ணுவதாக , ஏதோ புது விரிவுரை நடாத்தினான்.புதிராக நோக்கியவளிடம் நீ எல்லோருடனும் பழகுகிறாய்- எல்லையின்றி கதைக்கிறாய், எனக்கென பெரிதாய் முக்கியத்துவம் கொடுக்க விட்டாலும் கூட பரவாயில்லை.அனால் உன் இந்த செயல்கள் நாளைய வாழ்விற்கு பொருத்தமாயிராது என போதனை படித்தான்.இத்தனை நாட்களும் பார்க்க,பழக உறவாட பொருத்தமாயிருந்தவள் ,இன்றுதான் உனக்கு பொருத்தமற்றவள் என்று உணர்ந்தாயா ? என்றவளிடம் இப்போது தான் வாழ்க்கைக்கு தயாராவதகக் கூறி அடக்கினான்.
தன்னை நன்றாகப் புரிந்தவன் ,தன் இயல்பை முழுமையாக விரும்பியவன் , இன்று புதியவனாக குற்றம் சாட்டியதுடன் ,"பரவாயில்லை ,இனியேனும் எனக்காக உன்னை மாற்றிக் கொள்வதாகக் கூறாதே".ஏனென்றால் அது உன்னால் முடியாதக் காரியம் என கொண்ட காதல் மறந்து குறை படித்த கவலையால்,"என்னை உனக்காக மாற்றி ,நான் நானாயில்லாமல் உன்னோடு வாழும் அந்த வாழ்வு எனக்கும் தேவை இல்லை “என அவளும் தன்மானம் காக்க ,அவன் அவளிற்கிடையிலான வாக்குவாதம் அவர்கள் வளர்த்த காதலை அநாதையாக்கியது.

ராம் அபிக்கிடையிலான இறுதி சந்திப்பும் ,இறுதி தீர்மான அறிவுப்பும் இடம் பெற்று இன்றோடு இரு வாரங்கள். அவன் ஏதோ பகுதி வேலை செய்வதால் விரிவுரைகள் வருவதில்லை.அனால் அபிதான் ஒன்றாய் இருந்த அந்த இடங்களிற்கு, நண்பர்களிற்கு முகம் கொடுக்க தோல்வியுற்றவளாய் ,ஒரு வார காலம் வீட்டில் அடைந்து கிடந்தாள். விடயம் பீட நண்பர்களிடையே அம்பலமாகவே நண்பியர் வற்புறுத்தலால் வீட்டிலும் இருக்க பிடியாது,விரிவுரைகள் தேடி வந்தவளை துரத்திய பலரது அனுதாப பார்வையும், சிலரது ராமிற்கு சாதகமான பார்வையும் அவள் அவளாய் சிந்திக்க, பேச,படிக்க, சிரிக்க இடம் கொடாது மனச் சிறையில் மறியல் வைத்தன.






இன்னும் எத்தனை நாட்கட்கு இந்த அஞ்ஞாதவாசம் என எண்ணியவள் மனதில், நாளை ராமின் பிறந்த நாள், அவன் அவளை ,அவனிற்கென உரிமை கோரி இரு வருடங்கள் காணப் போகும் நாள். இரு வாரங்களாய் அவன் அவளிற்கு இல்லாமல் போனதே உரைக்கப் போகும் நாள் என மனம் நெருட ,விம்மிய மார்பை கட்டுப் படுத்தி, கண்ணீரைத் துடைக்க கைக் குட்டையை தேடினாள். இப்போது தன கவனிக்கிறாள்.அந்தி மாலை வானை அலங்கரிக்கத் தொடக்கி இருந்தது.இன்னும் தமது நெருக்கமான சம்பாஷணையில் இருந்த இடங்களில் அவ்வாறே காதல் ஜோடிகள். ஆனால் அவர்களிற்கிடையிலான காதல் எதுவரை? என்ற கேள்விகுறிகளுடன் , நேரமாவதை நினைவுக் கூர்ந்து, தன பீடம் நோக்கி நடக்கத் தொடங்கினாள் அபி.

மறுபடியும் ராம்......


அவன் பற்றிய நினைவுகள். அவன் எத்தனை சுலபமாய் அவளை மறந்து விட்டான்? ஆனால் அவளால் முடியுமா?....மீண்டும் பழைய அபியை எல்லோருடனும் பேசி ,சிரித்து, கிண்டலடித்து, கவனம் செலுத்திப் படிக்கத் தான் முடியுமா?......இனி, வாழ்வதே முடியாதே...என உண்மையாய் காதலித்தவள், ஒருவனே உளமார நேசித்தவள் படும் துயருள் உழன்றுக் கலைதவளாய் ,இந்த பெரிய நீண்ட சிற்றுண்டிச் சாலையில் ,யாருமே இல்லாத மேசையோரமாக அமர்ந்தாள். எவ்வளவு நேரம் வெறித்த பார்வையுடன் ,வெகு நேரம் அமர்ந்திருந்தாளோ அவள் அறியாள்.

" என்னம்மா?...கவலை தனியே உட்கார்ந்து இருக்காய்?...."தம்பி வரவில்லையா? என கவனத்தை கலைத்தார் அவ் வயோதிபத் தாத்தா. அது சிற்றுண்டிச் சாலை மூடும் நேரம் என்பதால் அவர் மேசைகளைத் துடைத்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்.வழமையாய் ராமும் அவளுமாய் ஒன்றாக சம்பாஷித்துக் கொண்டிருக்கும் பொது, அவருடனும் நகைச்சுவை உரையாடுவது உண்டு என்பதாலேயே ,இன்று இவள் தனித்து இருப்பதை விசாரிக்கிறார்.தனது கவலைகள் தன்னுடன் இருக்கட்டும் என்றவளாய், கஷ்டப் பட்டு சிரித்தாள்.தலை வலி வேறொன்றுமில்லை எனப் பொய் ஒன்றைக் கூறி , அவர் மேலும் ஏதாவது கேட்டு ,தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடாது இருக்க, அவரது கவனத்தை திருப்ப ,அவளே அவரைப் பற்றி ,அவரது வீட்டைப் பற்றி விசாரித்தாள்.



a


மேசையை துடைத்துக் கொண்டு இருந்தவர் நிமிர்ந்து பெருமூச்சு விட்டப் படி நின்று ,"எப்படி இந்த வேலையை செய்து கொண்டு எப்படியம்மா வீட்டுக்கு போவது?ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்தவன் தான் ,பெற்ற பிள்ளைகள் கை கழுவி விட்டார்கள்.அதற்காக நான் கட்டி வந்த மனைவியை கை விட முடியுமா? அவள் என்னை காதலித்து எனக்காக அவளது வீடு-பெற்றோர்- உறவை விட்டு நானே எல்லாம் என நம்பி வந்தவள்,அவளை எப்படியம்ம்மா கை விடுவது?அதுதான் எந்த வயதில் எச்சில் தட்டு கழுவும் வேலையேனும் செய்தாவது அவளை காப்பாற்றுகிறேன்" என்றார். அவர் கண்கள் மறைத்து இருந்த வலியை மறையாது காட்டினாலும் கூட, அவரோ ஒரு வரவழைத்த புன்னகையுடன் "நானும் உங்களை போல் தானம்மா,இன்னும் எங்கள் அன்பு அப்படியே மாறாமல் இருக்கிறது.இன்னும் அவள் அங்கே இரவு சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பாள். நான் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு ஒரு ஐந்து ரூபா குற்றியை போட்டு தினமும் கதைத்து விடுவேன். பிறகே அவளிற்கு இராச் சாப்பாடு, எனக்கு இந்த சாலையோரத்தில் நிம்மதியான உறக்கம்" என தங்கள் அன்னியோன்னிய உறவை பெருமைப் பட்டு அடுத்த மேசை நோக்கி நகர்ந்தார்.






" என்னை காதலித்து ,என்னையே நம்பி,எனக்க எல்லாம் துறந்து வந்தவளை எப்படியம்மா கை விடுவது?" என்ற அவரது குரல் அவள் அடிச் செவியினில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.மெல்ல எழுந்து ,தன் புத்தகங்களை இறுக அணைத்தவள் ,சிற்றுண்டிச் சாலையிலிருந்து வாயிலை நோக்கி நடக்கத்தொடங்கினாள். நிற்கும் மரங்கள், கல் இருக்கைகள், கட்டிடங்கள், தெரிந்த நண்பர்கள், தெரியாத முகங்கள் என எல்லாம் கடந்து போயின. அவள் நெஞ்சில் நிலைத்து இருக்க தகுதியற்ற ராமும் நினைவுகளில் இருந்து விரைவில் கடந்து போவான். இதுவும் எதுவும் கடந்து போகும்.


வயோதிப வயதிலும் அந்த மனிதரிடம் உள்ள அன்பு, அக்கறை ,எது வந்தாலும் கை விடாத பிடிப்பு என்பன எந்த வயதிலேயே எல்லாத ராம் .....இயல்பான என்னை விரும்பாத ராம்.....உன்னை எனக்கும் பிடிக்கவேயில்லை என நெஞ்சம் உரக்கக் கத்தியது, அவள் மனம் இலகுவாகிறது.எப்போது அவள் நடையிலும் நோக்கு தெரிகிறது. எதிர்ப்பட்டவர்களை பார்த்து மனம் திறந்து புன்னகைக்கிறாள்.

ஏனென்றால் அவள் மனம் அறியும்,
பொன்னை- பொருளை- புகழை விரும்பும்
இந்த உலகில்
என்னை- எனக்காக விரும்பும் ஒருவன்
என்றேனும் வருவான்"
அதுவரை...............








கொழும்புப் பல்கலைகழக தமிழ்ச் சங்கத்து 2010 இளம் தென்றலுக்காய்
இவள் உங்களுள் ஒருத்தி.............











Monday, September 20, 2010

விடா முயற்சி விஷ்வ ரூப வெற்றி................





"விடா முயற்சி விஷ்வ ரூப வெற்றி"...............
மன்னிக்கவும்,இது எனது சொந்த கருத்தன்று. அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாஸ் (எ) பாஸ்கரன் திரை படத்தில் தான் இந்த அற்புதமான கருத்தை அல்வா சாப்பிடுவதை போல இனிக்க ,புத்தியில் இடிக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். எடுத்துகாட்டு ஒன்றை எங்கிருந்தும் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு. இதையெல்லாம் இங்கு நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நானும் இப்படி தான் ஏராளமான உறுதிகளுடன் வலைபூ பதிவை ஆரம்பித்திருந்தேன். ஆனால் உப்பு விற்க போனால் மழைக் காலம் என்பது போல் எனக்கும் பரீட்சை, பரீட்சை காய்ச்சல், அதற்கு பிறகான அடுத்த கட்ட நகர்வு, அதற்கான வேலைகள் என போதாத காலம். இருப்பினும் காலம் பார்த்து உப்பு விற்பவனும், மழை காலத்திலும் உப்பை பணம் ஆக்குபவனுமே சிறந்த வணிகனாகுகிறான் . வலைபூ பதிவு அனுபவத்தை பொறுத்தளவில் இன்னும் தவழக் கூட ஆரம்பியாத நான் ,தலைக்கு மேல் வேலைகள்,தொழில் பிணக்குகள், மனப் பாரங்கள் என அனைத்தின் மத்தியிலும் சளராது தவறாது தம் பதிவுகளை பகிர்ந்துக் கொள்ளும் சிறந்த வலைபூ பதிவாளர்கள் அனைவரையும் பார்த்து,வியந்து, வாழ்த்தி நிற்கின்ற போது நானும் இவர்களுள் ஒருவராய் வரு நாள் வெகு தூரத்தில் இல்லை, தூரத்தில் தான் இருக்கிறது என்றிட ஆசைப் படுகிறேன்.
அதிகமான பேச்சு ஆக்கத்திற்கு நண்பனாகாதாம் , ஆதலால் ஏன் நீண்ட நாட்களாய் பதிவுகளிற்கு விடுப்பு என்பதற்கான காரணத்தை இதற்கு மேல் கூறுவதாயில்லை.
இறுதியாய் அடிக்கடி தொலைந்தாலும் , அடி மனதில் பதிந்துள்ள எண்ணப் பொதிகளில் உள்ளவற்றுள் ஒரு சிலவற்றை சுமந்து அடிக்கடி சந்திப்பேன் என்ற வாக்குகளுடன்,

இவள் எனக்குள் ஒருத்தி.......

Sunday, July 25, 2010

நான் வாழ்கிறேன்....





நான் வாழ்கிறேன்
ஏன் வாழ்கிறேன்
எதற்காய் வாழ்கிறேன்
எதற்கும் விடையின்றியே ....

வாழ்கிறேனென்ற
வாழ்தற்கான
அறிகுறிகளே
வாழ்க்கை என்பதாய் ....

மாண்டுப் போவதால்
மண்ணிற்கே
பாரமென
மாள மனமின்றி....

சாதல் கடினமாயிருக்கலாம்
வாழ்தல்
அதனினும் மேலென்ற
நியாயப்படுத்தல்களுடன்....

நான்கு பேர்
என்ன நினைப்பரென்ற
யாரோ நால்வரது
அபிப்ராயத்தை சுற்றியே....

அடுத்தவர்கட்க்கான
இடம் கொடுப்புக்கள்
எடுத்தார் கைப் பிள்ளையாய்
என்னை சுற்றியோரிடையே....

என் விருப்பு
என் சுதந்திரம்
என் வாழ்வு
எதற்கும் அர்த்தம் தெரியாமலே....

ஏற்கவும் முடியாது
மீறிட துணிவின்றி
மாறிடவும் மனமின்றி
மாண்டுப் போன மனசுடன்....

வாழ்வா?
சாவா?
போராட
வாழ்வில் ஈர்ப்பில்லை....

ஒழுக்கை சுற்றிய பிணிப்பில்
ஒழுகும் கோள்களாய்
பந்தப் பிணிப்பில்
நானுமொரு கோளாய்.....

சமூகப் பிராணி
இவளென
இணைக்கப்பட்ட
சங்கிலிப் பிணைப்புக்குள் ....

நான்
என்பது
மூத்தோர் அடையாளங்களே
ஆன போதும்....

எனது சுயம்
எட்டப்பர்களால் விலைப் பேசப்பட்டு
அரசியல் சந்தையில்
தொலைக்கப் பட்ட பின்னும்....

செய்தொழில் தர்மம்
புரி செயலில் மனசாட்சி
நீதி கதைகளான
உலகில்....

வாழ்கிறேனென
நான் வாழ்வதால்
ஆகிட ஏதுமில்லை
என்றானப் பின்னும்....

என் இருப்பு
வெறும்
எண்ணிக்கை மட்டுமே
என்றாலும்....

நான் ரசித்தக் காலம்
பசித்து புசித்த நாட்கள்
நானாயிருந்தப் பொழுதுகள்
நேற்றைகளாய் போன பின்னும்....

இன்றும்
வாழ்கிறேன் நான்
மண்ணில்
நான்கோடு ஐந்தாய்

நானும்
வாழ்கிறேனென
நான்கு பேருக்கு
காட்டுவதற்காய் ....


இவள் எனக்குள் ஒருத்தி.........
கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச் சங்க சஞ்சிகை "இளம் தென்றல் 2009-2010 " தொகுப்பிற்காய்.

Friday, July 23, 2010

எண்ணித் துணிக காதல் கருமம்;துணிந்த பின்.........

நண்பர்களே....

இத்தால் ஒரு அறிவித்தல்.
நேரடியாக மேற்போந்த தலைப்பிற்குரிய கவிதைக்கு நுழைவதன் முன்,
இந்த கவிதை பிறந்த கதையையும் கூட கவிதையாய் கூறி இடையூறு படுத்த வேண்டிய நிர்பந்தம்....

எதை எதையோ
எழுதினேன்
கவிதை
மரபு தாண்டியே...

எல்லோரும்
தொடும் காதலை
தொட
துணிவின்றி இதுவரை நான் ...

நேற்றைய
அனுபவங்கள்
அடித்து சென்ற
புயலை....

தென்றலாய்
காதல்
எனும்
பேர் கொண்டு வருடுகிறேன் இன்று ...

ஆதலால்
நானும் வரைந்தேன்
காதல்
கவிதை ஒன்றே ...

சட்டம் சொல்லும்
செய்தவனை விட
தூண்டியவனிட்கே
தண்டனை அதிகம் என்று...

எங்கும்
நான் எழுதியதை விட
எழுத ஆற்று படுத்திய
உனக்கே அதிக விழுக்காடுகள் ...

ஆதலால் நண்ப லூ நன்றிகள் உனக்கே....

இதை இனிமையான இடையூறாக எடுத்துக் கொள்ள வேண்டி,
இனி இவள் கிறுக்கல் உங்கள் பார்வைக்கு......



எண்ணித் துணிக காதல் கருமம்;துணிந்த பின்.........








கையளவு இதயம்
என்றாலும்
கவனமான
கையிருப்பிற்கே .....

இதயம்
இடம் மாற முன்
இரு முறை சிந்தித்தல்
நிந்தித்தல் ஆகாது....

கொடுத்த பின்
சீர் தூக்கி பார்க்க
காதல்
குழந்தை விளையாட்டன்று....

கொடுத்து
மீள
காதல்
வெறும் கொடுக்கல் வாங்கலும் அன்று...

ஒரு முறை
ஒருவன் வசமாகி போனால்
மறுமுறை உயிர்க்க
அவன் நேசமே சுவாசமாகும்....

புரிதலின் இறுதியில்
பரிணமிக்கும்
புனித
காதல்..

புரிந்திடாத
வணிகன்
அதை
தனதாக்கி கொண்டால்.....

ஒரு முறை
ஒருவனிட்கேயென
தனை வரித்த
வனிதையவள் வாழ்வு.....

காலமும்
காதல் துளிர்க்கா
கண்ணீர் பொழி
பாலையே....

சுய அனுபவங்களிட்கு அப்பால் இவள் உங்களுள் ஒருத்தி ஜனஹா.....