Sunday, July 25, 2010

நான் வாழ்கிறேன்....





நான் வாழ்கிறேன்
ஏன் வாழ்கிறேன்
எதற்காய் வாழ்கிறேன்
எதற்கும் விடையின்றியே ....

வாழ்கிறேனென்ற
வாழ்தற்கான
அறிகுறிகளே
வாழ்க்கை என்பதாய் ....

மாண்டுப் போவதால்
மண்ணிற்கே
பாரமென
மாள மனமின்றி....

சாதல் கடினமாயிருக்கலாம்
வாழ்தல்
அதனினும் மேலென்ற
நியாயப்படுத்தல்களுடன்....

நான்கு பேர்
என்ன நினைப்பரென்ற
யாரோ நால்வரது
அபிப்ராயத்தை சுற்றியே....

அடுத்தவர்கட்க்கான
இடம் கொடுப்புக்கள்
எடுத்தார் கைப் பிள்ளையாய்
என்னை சுற்றியோரிடையே....

என் விருப்பு
என் சுதந்திரம்
என் வாழ்வு
எதற்கும் அர்த்தம் தெரியாமலே....

ஏற்கவும் முடியாது
மீறிட துணிவின்றி
மாறிடவும் மனமின்றி
மாண்டுப் போன மனசுடன்....

வாழ்வா?
சாவா?
போராட
வாழ்வில் ஈர்ப்பில்லை....

ஒழுக்கை சுற்றிய பிணிப்பில்
ஒழுகும் கோள்களாய்
பந்தப் பிணிப்பில்
நானுமொரு கோளாய்.....

சமூகப் பிராணி
இவளென
இணைக்கப்பட்ட
சங்கிலிப் பிணைப்புக்குள் ....

நான்
என்பது
மூத்தோர் அடையாளங்களே
ஆன போதும்....

எனது சுயம்
எட்டப்பர்களால் விலைப் பேசப்பட்டு
அரசியல் சந்தையில்
தொலைக்கப் பட்ட பின்னும்....

செய்தொழில் தர்மம்
புரி செயலில் மனசாட்சி
நீதி கதைகளான
உலகில்....

வாழ்கிறேனென
நான் வாழ்வதால்
ஆகிட ஏதுமில்லை
என்றானப் பின்னும்....

என் இருப்பு
வெறும்
எண்ணிக்கை மட்டுமே
என்றாலும்....

நான் ரசித்தக் காலம்
பசித்து புசித்த நாட்கள்
நானாயிருந்தப் பொழுதுகள்
நேற்றைகளாய் போன பின்னும்....

இன்றும்
வாழ்கிறேன் நான்
மண்ணில்
நான்கோடு ஐந்தாய்

நானும்
வாழ்கிறேனென
நான்கு பேருக்கு
காட்டுவதற்காய் ....


இவள் எனக்குள் ஒருத்தி.........
கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச் சங்க சஞ்சிகை "இளம் தென்றல் 2009-2010 " தொகுப்பிற்காய்.

Friday, July 23, 2010

எண்ணித் துணிக காதல் கருமம்;துணிந்த பின்.........

நண்பர்களே....

இத்தால் ஒரு அறிவித்தல்.
நேரடியாக மேற்போந்த தலைப்பிற்குரிய கவிதைக்கு நுழைவதன் முன்,
இந்த கவிதை பிறந்த கதையையும் கூட கவிதையாய் கூறி இடையூறு படுத்த வேண்டிய நிர்பந்தம்....

எதை எதையோ
எழுதினேன்
கவிதை
மரபு தாண்டியே...

எல்லோரும்
தொடும் காதலை
தொட
துணிவின்றி இதுவரை நான் ...

நேற்றைய
அனுபவங்கள்
அடித்து சென்ற
புயலை....

தென்றலாய்
காதல்
எனும்
பேர் கொண்டு வருடுகிறேன் இன்று ...

ஆதலால்
நானும் வரைந்தேன்
காதல்
கவிதை ஒன்றே ...

சட்டம் சொல்லும்
செய்தவனை விட
தூண்டியவனிட்கே
தண்டனை அதிகம் என்று...

எங்கும்
நான் எழுதியதை விட
எழுத ஆற்று படுத்திய
உனக்கே அதிக விழுக்காடுகள் ...

ஆதலால் நண்ப லூ நன்றிகள் உனக்கே....

இதை இனிமையான இடையூறாக எடுத்துக் கொள்ள வேண்டி,
இனி இவள் கிறுக்கல் உங்கள் பார்வைக்கு......



எண்ணித் துணிக காதல் கருமம்;துணிந்த பின்.........








கையளவு இதயம்
என்றாலும்
கவனமான
கையிருப்பிற்கே .....

இதயம்
இடம் மாற முன்
இரு முறை சிந்தித்தல்
நிந்தித்தல் ஆகாது....

கொடுத்த பின்
சீர் தூக்கி பார்க்க
காதல்
குழந்தை விளையாட்டன்று....

கொடுத்து
மீள
காதல்
வெறும் கொடுக்கல் வாங்கலும் அன்று...

ஒரு முறை
ஒருவன் வசமாகி போனால்
மறுமுறை உயிர்க்க
அவன் நேசமே சுவாசமாகும்....

புரிதலின் இறுதியில்
பரிணமிக்கும்
புனித
காதல்..

புரிந்திடாத
வணிகன்
அதை
தனதாக்கி கொண்டால்.....

ஒரு முறை
ஒருவனிட்கேயென
தனை வரித்த
வனிதையவள் வாழ்வு.....

காலமும்
காதல் துளிர்க்கா
கண்ணீர் பொழி
பாலையே....

சுய அனுபவங்களிட்கு அப்பால் இவள் உங்களுள் ஒருத்தி ஜனஹா.....

Monday, July 5, 2010

முதல் பதிவில் ....முதல் முதலாய் ஒரு ஆக்கம் .....

எதை போடலாம் என என எண்ணமுன்னரே என் எண்ணக் கிடங்கில் இருந்து வீறு கொண்டு எழுந்தது,
சட்டவியல்!
சமீப காலமாய் நான் அதிகம் நேசித்து படித்த ஒரு பல்கலை கழக சட்டப் பாடம்.எத்தனை தர்க்கம், எத்தனை அலசல், அன்றாட வாழ்வில் நம் காணும், செய்யும்,கேள்விப் படும் விடயங்களின் பின் தான் எத்தனை எத்தனை காரண காரிய விளக்கங்கள்.....
இப்படி ஒரு பாடத்தை தவற விட்டிருந்தால் வாழ்கையில், அதுவும் சட்ட பீட மாணவியாக பெற வேண்டிய பெரிய ஒரு அனுபவத்தை இழந்துப் போவோம் என தெரிந்து தான் இதை கட்டாய பாடமாக புகுத்தி இருப்பார்கள் போலும் என எப்போது என்ன தோன்றுகிறது. இந்த இடத்தில் சட்ட வியலை இவரிற்கு மேல் இனி எவரும் இத்துணை அருமையாய் கற்பிக்க முடியாது எனும் வண்ணம் விரிவுரை செய்த சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. தமிழ்மாறன் அவர்களை பெருமதிப்புடன் நினைவு கூறுகிறேன். இதற்கு மேலும் உங்கள் பொறுமை சோதிக்கவோ, இல்லை என் சட்டவியல் பெருமை பாடவோ விரும்பாது,

சட்டவியல் என்னுள் புகுத்திய எண்ணங்களுடன், அடிப்படையிலேயே பெண்ணியவாதி என எனை உருவகித்து கொண்ட ஆர்வத்தை இணைத்து
கொழும்பு பல்கலைகழக 2009-2010 இந்து மன்றத்தின் இந்து தீபம் சஞ்சிகைக்கு எழுதியிருந்த கவிதை இனி உங்கள் பார்வைக்கு......

பெண் இவள் பார்வையில்.....






மதம்-
முன் தோன்றிய தாய் வழி குடிகளை
தந்தை வழி குடியினராக்கிய
ஆணாதிக்கத்தின் ஆரம்பம்...

மொழி-
செல்வி என்றும் திருமதி என்றும்
பெண்ணிற்கே பேதைமை வகுத்த
அடக்குமுறையின் கருவி .........

இலக்கியம்-
பெண்ணிற்கே கற்பு
பெண்ணவள் பூவையென
நம்மவர் வல்லமைகிங்கு கடிவாளம்....

சட்டம்-
ஆண் பெண் பேதம்
ஆணாதிக்க அடக்குமுறைகளிட்கெல்லாம்
விதிகளால் ஒரு அங்கீகாரம்....

அந்நியர் ஆட்சி-
திருமணத்திற்கு பதிவு
பிள்ளைக்கு சான்று என
ஆண்களை முதன்மை படுத்திய இன்னோர் கூட்டம்.....

சமத்துவம்-
ஆண் வேறு பெண் வேறு
ஆணாதிக்கத்திற்கு சமனான பெண்ணாதிக்கம்
பெண்ணியமாகாது ....

வாழ்கை-
ஆணின் ஆட்சி
ஆணின் அனுபவம்
அனைத்தும் ஆணாய் ஆனவொன்று ...

பெண்கள்-
ஆணே இறங்கி வந்தாலும்
அவனாய் ஒரு நிலை தந்தாலும்
அடங்கிய ஆமையாய் ஒளிந்த ஓரினம்.....

அடுத்தவர் பார்வைகள்
கொடுத்திடும் நிலைகளை
எண்ணி மாயும்
பெண்களில் ஒருத்தியாய்.....


பெண் என் பார்வையில்
எது
எப்படியானாலும்
அவற்றுக்கிங்கு என்ன இடம்?.....


ப்ரியமுடன் என்னுள் ஒருத்தி
கொழும்பு பல்கலைக் கழக இந்து தீபம் சஞ்சிகைக்காக...