Monday, July 5, 2010

முதல் பதிவில் ....முதல் முதலாய் ஒரு ஆக்கம் .....

எதை போடலாம் என என எண்ணமுன்னரே என் எண்ணக் கிடங்கில் இருந்து வீறு கொண்டு எழுந்தது,
சட்டவியல்!
சமீப காலமாய் நான் அதிகம் நேசித்து படித்த ஒரு பல்கலை கழக சட்டப் பாடம்.எத்தனை தர்க்கம், எத்தனை அலசல், அன்றாட வாழ்வில் நம் காணும், செய்யும்,கேள்விப் படும் விடயங்களின் பின் தான் எத்தனை எத்தனை காரண காரிய விளக்கங்கள்.....
இப்படி ஒரு பாடத்தை தவற விட்டிருந்தால் வாழ்கையில், அதுவும் சட்ட பீட மாணவியாக பெற வேண்டிய பெரிய ஒரு அனுபவத்தை இழந்துப் போவோம் என தெரிந்து தான் இதை கட்டாய பாடமாக புகுத்தி இருப்பார்கள் போலும் என எப்போது என்ன தோன்றுகிறது. இந்த இடத்தில் சட்ட வியலை இவரிற்கு மேல் இனி எவரும் இத்துணை அருமையாய் கற்பிக்க முடியாது எனும் வண்ணம் விரிவுரை செய்த சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. தமிழ்மாறன் அவர்களை பெருமதிப்புடன் நினைவு கூறுகிறேன். இதற்கு மேலும் உங்கள் பொறுமை சோதிக்கவோ, இல்லை என் சட்டவியல் பெருமை பாடவோ விரும்பாது,

சட்டவியல் என்னுள் புகுத்திய எண்ணங்களுடன், அடிப்படையிலேயே பெண்ணியவாதி என எனை உருவகித்து கொண்ட ஆர்வத்தை இணைத்து
கொழும்பு பல்கலைகழக 2009-2010 இந்து மன்றத்தின் இந்து தீபம் சஞ்சிகைக்கு எழுதியிருந்த கவிதை இனி உங்கள் பார்வைக்கு......

பெண் இவள் பார்வையில்.....






மதம்-
முன் தோன்றிய தாய் வழி குடிகளை
தந்தை வழி குடியினராக்கிய
ஆணாதிக்கத்தின் ஆரம்பம்...

மொழி-
செல்வி என்றும் திருமதி என்றும்
பெண்ணிற்கே பேதைமை வகுத்த
அடக்குமுறையின் கருவி .........

இலக்கியம்-
பெண்ணிற்கே கற்பு
பெண்ணவள் பூவையென
நம்மவர் வல்லமைகிங்கு கடிவாளம்....

சட்டம்-
ஆண் பெண் பேதம்
ஆணாதிக்க அடக்குமுறைகளிட்கெல்லாம்
விதிகளால் ஒரு அங்கீகாரம்....

அந்நியர் ஆட்சி-
திருமணத்திற்கு பதிவு
பிள்ளைக்கு சான்று என
ஆண்களை முதன்மை படுத்திய இன்னோர் கூட்டம்.....

சமத்துவம்-
ஆண் வேறு பெண் வேறு
ஆணாதிக்கத்திற்கு சமனான பெண்ணாதிக்கம்
பெண்ணியமாகாது ....

வாழ்கை-
ஆணின் ஆட்சி
ஆணின் அனுபவம்
அனைத்தும் ஆணாய் ஆனவொன்று ...

பெண்கள்-
ஆணே இறங்கி வந்தாலும்
அவனாய் ஒரு நிலை தந்தாலும்
அடங்கிய ஆமையாய் ஒளிந்த ஓரினம்.....

அடுத்தவர் பார்வைகள்
கொடுத்திடும் நிலைகளை
எண்ணி மாயும்
பெண்களில் ஒருத்தியாய்.....


பெண் என் பார்வையில்
எது
எப்படியானாலும்
அவற்றுக்கிங்கு என்ன இடம்?.....


ப்ரியமுடன் என்னுள் ஒருத்தி
கொழும்பு பல்கலைக் கழக இந்து தீபம் சஞ்சிகைக்காக...

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உங்கள் பதிவு அருமையாக உள்ளது .
    வாழ்த்துக்கள்
    உங்கள் அடுத்த பதிவுக்கா காத்திருக்கும் உங்களில் ஒருவன் ...........

    http://dilleepworld.blogspot.com

    ReplyDelete
  3. கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்....
    எண்ணத்தில் நிறைந்து, எழுத்தாய் உருவம் பெற்ற பல பதிவுகள் இன்னும் வலைபூ கிடப்பில் சில பல காரணங்களால் கிடக்கின்றன,
    அவற்றோடு சந்திக்கிறேன்,
    அதுவரை....

    ReplyDelete