
நான் வாழ்கிறேன்
ஏன் வாழ்கிறேன்
எதற்காய் வாழ்கிறேன்
எதற்கும் விடையின்றியே ....
வாழ்கிறேனென்ற
வாழ்தற்கான
அறிகுறிகளே
வாழ்க்கை என்பதாய் ....
மாண்டுப் போவதால்
மண்ணிற்கே
பாரமென
மாள மனமின்றி....
சாதல் கடினமாயிருக்கலாம்
வாழ்தல்
அதனினும் மேலென்ற
நியாயப்படுத்தல்களுடன்....
நான்கு பேர்
என்ன நினைப்பரென்ற
யாரோ நால்வரது
அபிப்ராயத்தை சுற்றியே....
அடுத்தவர்கட்க்கான
இடம் கொடுப்புக்கள்
எடுத்தார் கைப் பிள்ளையாய்
என்னை சுற்றியோரிடையே....
என் விருப்பு
என் சுதந்திரம்
என் வாழ்வு
எதற்கும் அர்த்தம் தெரியாமலே....
ஏற்கவும் முடியாது
மீறிட துணிவின்றி
மாறிடவும் மனமின்றி
மாண்டுப் போன மனசுடன்....
வாழ்வா?
சாவா?
போராட
வாழ்வில் ஈர்ப்பில்லை....
ஒழுக்கை சுற்றிய பிணிப்பில்
ஒழுகும் கோள்களாய்
பந்தப் பிணிப்பில்
நானுமொரு கோளாய்.....
சமூகப் பிராணி
இவளென
இணைக்கப்பட்ட
சங்கிலிப் பிணைப்புக்குள் ....
நான்
என்பது
மூத்தோர் அடையாளங்களே
ஆன போதும்....
எனது சுயம்
எட்டப்பர்களால் விலைப் பேசப்பட்டு
அரசியல் சந்தையில்
தொலைக்கப் பட்ட பின்னும்....
செய்தொழில் தர்மம்
புரி செயலில் மனசாட்சி
நீதி கதைகளான
உலகில்....
வாழ்கிறேனென
நான் வாழ்வதால்
ஆகிட ஏதுமில்லை
என்றானப் பின்னும்....
என் இருப்பு
வெறும்
எண்ணிக்கை மட்டுமே
என்றாலும்....
நான் ரசித்தக் காலம்
பசித்து புசித்த நாட்கள்
நானாயிருந்தப் பொழுதுகள்
நேற்றைகளாய் போன பின்னும்....
இன்றும்
வாழ்கிறேன் நான்
மண்ணில்
நான்கோடு ஐந்தாய்
நானும்
வாழ்கிறேனென
நான்கு பேருக்கு
காட்டுவதற்காய் ....
இவள் எனக்குள் ஒருத்தி.........
கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச் சங்க சஞ்சிகை "இளம் தென்றல் 2009-2010 " தொகுப்பிற்காய்.
//மாண்டுப் போவதால்
ReplyDeleteமண்ணிற்கே
பாரமென
மாள மனமின்றி....///
என் மனதை வருடிய வார்த்தைகள்
நன்றாக உள்ளது உங்கள் கவிதை
வாழ்த்துக்கள்