Saturday, September 25, 2010

என்னை விரும்பும் ஒருவன்.......................





மார்பிற்கு குறுக்காக அணைத்திருந்த நான்கைந்து புத்தகங்களை இறுகப் பற்றிய கரங்களுடன், வீசிடும் காற்றுடன் வெற்றிப் போர் புரியும் காதோர கூந்தல் கற்றை அடிக்கடி காது மடல்களின் பின் இருத்தி விட முனையும் விடாத முயற்சியுடனும் , எங்கே போகிறோம் என்ற இலக்கில்லாத நடையுடனும் நடந்து கொண்டிருந்தாள் அபி. பார்ப்பதற்கு அழகாக ,அமைதியாகவும் பழகினால் அதற்கு புறம்பாய் சுட்டித் தனமாகவும் , படிப்பில் கெட்டிக்காரியுமான அபி என்கிற அபிரா தற்போது வெற்றிகரமாக இரண்டு வருடங்களை கடந்து மூன்றாமாண்டில் இருக்கும் ஒரு பல்கலைகழக மாணவி.







இந்நேரத்தில் விரிவுரையில் இருக்க வேண்டியவள் விரிவுரை விட்டு, ஏன் பீட வளாக எல்லையை விட்டே தூர விலகி ஓடிக் கொண்டிருந்தாள். விரிவுரைகளில் லயிக்கும் மனம் இப்போது அவளிற்கில்லை, ஏன் மனமே அவளிடம் இல்லை. தன்னுடைய பீட வளாகத்தில் இருக்கும் வரை காணும் காட்சிகள், செல்லும் இடங்கள் யாவும் நடந்ததையே நினைவு படுத்தும் என்பதால், வழமையாக மற்ற பீடங்களின் வழி கூட பயணிக்காதவள் இன்று அவற்றின் வழியே நடந்துக் கொண்டிருந்தாள்.


வீசும் காற்று,பச்சை புற்தரை, தம் இரு கரங்களின் பிணைப்பால் குடை விரித்த காதல் மர ஜோடிகள்,உயர்ந்து நின்ற நூலகம்,அதன் ஓரமாய் உயரம் பாயும் போட்டி நடாத்திக் கொண்டிருந்த அணில்கள்,எதுவும் இன்று அவள் ரசனைக்கு உகந்தனவாயிருக்கவில்லை.அழுதழுது வறண்டு போன விழிகளிற்கு எல்லாம் பாலைவனமாக மட்டுமே.

ஏன் எப்படி? எதுவுமே நிலையில்லையா?உறவுகளே பிரியத்தான் என்றிருக்கலாம்.ஆனால் நமக்கிடையிலான பிரிவு இத்தனை சீக்கிரத்திலா? எதையும் சரியாய் கவனித்து தேர்ந்தெடுக்க தெரிந்த கெட்டிக்காரி என மற்றவர்கள் அவளை எடை போட்டது எவ்வளவு தவறானது.இன்று தவறான தெரிவால்,ஏமார்ந்து,மனதையும் வருத்தி இப்படி அங்கும் இங்குமாய் அலைய வேண்டியுள்ளதே என தன் அலை பாய்ந்திட்ட மனதை திட்டிக் கொண்டவள், கன்னக் கதுப்புகளில் படிந்த கண்ணீர்த் துளிகளை யாரும் பார்க்க முன் துடைக்க முனைந்த போதுதான் அது நடந்தது.


"ஹாய் அபி..."என ராகமாய் தன் பெயரை நீட்டி முழக்கியவளை இது கௌஷி என இனம் கண்டு நிமிர்ந்திட முற்பட்ட போது தான் அவர்கள் நெற்றியும் நெற்றியும் கை குலுக்கி கொண்டன. தன் நெற்றியோரத்தை வருடியப் படி சமாளிக்க முற்பட்டவளை "அடடா ராம் இல்லாமல் தனியாய் நடந்தால் இப்போதெல்லாம் உன் பார்வை கூட கோளாறு போல இருக்கே,ஒஹ் மறந்திட்டேனே,காதல் தான் குருடாச்சே....ஏய் ராமை கேட்டதை சொல்..." என தானே கேள்வியும் பதிலுமாய் கடந்து போனாள் அந்த கெளசல்யா.எப்பொழுதும் அவள் இப்படித்தான்.பகுதி நேர தொழிலையும் செய்து கொண்டு படிப்பதால் இவள் இருந்திருந்து தான் விரிவுரைக்கு வருவதே. ஏதோ சக நண்பர்களது கையொப்ப திறமையால் இரண்டு வருடங்களும் சமூகமளிப்பிற்கான தகைமையை காட்டி பரீட்சை எழுதி விட்டாள்.பொதுவாக நண்பிகள் இவளை "விசிடிங் ஸ்டுடென்ட்" என்று தான் அழைப்பார்கள். அதனால் தான் அவள் நடந்தது எதுவும் தெரியாது ராமை பற்றி அபியிடம் விசாரிக்கிறாள். நடந்தவற்றை பின்னர் அறியும் போது வருத்தப் படக் கூடும். ஆனால் இங்குள்ள பெரிய எட்டாவது அதிசயம் மற்ற மாணவர்வர்களது அன்றாட தொலைபேசி அரட்டை பதிவுகளில் இதை தவற விட்டது தான், என எண்ணிக் கொண்டவள் கண்களில் உயர்ந்து வளர்ந்து கிளைகளால் கூரை போட்ட மரத்திற்கும் , புற் தரைக்கும் இடையே எழுப்ப பட்டிருந்த கல் இருக்கை படவே ,ஒன்றில் அமர்ந்து கொண்டாள்.


இந்த ஒதுக்குபுரமா ன இடத்திற்கு இவளை தேடி வந்து இப்போதைக்கு யாரும் தொல்லை தரப் போவதில்லை என்ற தெம்பில், தனிமை கிடைத்து விட்ட திருப்தியில் அதுவரை அணைத்திருந்த புத்தகங்களை அருகே வைத்தாள். சுற்றும் முற்றும் ஓடிய அவளின் அந்த பார்வை அவள் எதையோ தொலைதிருந்ததை பறை சாட்டின.

பச்சை பசேலென பூங்கா போல் இல்லாவிட்டாலும் கூட , பூங்காவுள் இருக்கும் உணர்வை தரத் தக்க ரம்யமான சூழல், மரங்கள்,பறவைகள்,தவிர பல கல் இருக்கைகள் இவற்றை எந்த நோக்கத்தில் பல்கலைகழக கட்டுமாணிகள் நிர்மாணித்தார்களோ, ஆனால் வழக்காற்று சம்பிரதாயமாய் இவை காதலர்கட்கு இல்லை என்றால் ஜோடிகட்கு சொந்தமென உரித்து எழுதப் பட்டு இருந்தது. காதல் வந்தாலே தனித்து ஒதுங்கி , நண்பர்களது
இடையீடின்றி அவளை அவனும், அவனை அவளும் அறியத் துடிக்கும் பல்கலை காதல் ஜோடிகளிற்கான பூர்வீக சொத்து இது ஒன்றுதான்.





இப்போதும் இரு இருக்கைகளை தவிர மற்ற இருக்கைகள் எல்லாம் காதல் ஜோடிகளால் அலங்கரிக்கப் பட்டு இருந்தன.அப்படி என்ன கதைப்பார்களோ முடிவற்ற சம்பாஷணை தான். பொதுவாக இருவருக்கே உரித்தான இருக்கைகளில் அங்கு அவள் தனித்து அமர்ந்து இருப்பது மற்றவர் பார்வைக்கு வேடிக்கையாகவும்,விநோதமாயும் இருக்கும் என்பதை அவள் அறிவாள்.காதல் வந்தாலே காக்கையும் தன்னை கவனிப்பதாக காதலர்களிற்கு தோன்றும் என்ற வைரமுத்து வரிகள் நடைமுறை உண்மை ஆயின் ஏன் இவர்களிற்கு மட்டும் மற்றவர்களின் பார்வைகள் புரிவதே இல்லை? எண்ணியவள் .......அவன் ஆவலுடன் காதல் கொண்ட காலங்களில் இப்படியெல்லாம் இருப்பதை விரும்பாததையும் ,அதை ராமும் ஏற்று நடந்ததையும்,அவள் அவனை கொண்டாடியதையும் நினைத்துப் பார்த்தாள்.


ராம்......





நீதான் எத்தனை அன்பாக இருந்தாய்? அக்கறை காட்டினாய்? சந்தித்த ஆண்கள், சிந்தித்துப் பார்த்த ஆண்கள் என எல்லோர்க்கும் மேலாக என் எதிர்பர்ப்புகளிற்கு ஏற்றவனாக இருந்தாயே.......நண்பனாக இருந்த காலத்திலும் சரி, காதலனாய் ஆன பின்பும் சரி,எத்தனை உத்தமமாய் நடந்துக் கொண்டாய் ? சராசரி காதல் ஜோடிகள் அல்ல என உன் யோக்கியமான நடத்தையினால் நல்ல பெயர் வாங்கியது எல்லாம் என்று பொய்த்து விட்டதே!எப்படி? ஒரு காலத்தில் நான் செய்யும் எல்லாம் உனக்கு பிடிப்பதால் என்னை பிடிப்பதாக கூறிய உனக்கு, இன்று மட்டும் ஏன் என்னை,என் செயல் எதையுமே பிடிக்காமல் போனது?மாறியது நான் அல்லவே ராம்,உன் பார்வைதான்.எண்ணங்கள் அலை மோதி அவள் மனக் கவலையை கூட்டிய போது ,அது வரை அடக்கிய கண்ணீர் துளிகள் கண்மடல் தாழ் திறந்து,வெளி வந்து ஆர்பரித்தன.அருகே இருந்த ஜோடிகளிற்கு தன் விசும்பல் ஒலி ஏன் இடையூறாக வேண்டும் என அதை கைகுட்டையால் தடை போட முனைந்தவள்,கை குட்டையை கூட அவனிற்கு பிடித்த நீல வானின் நிறத்தில் பாவித்ததை நினைவு கூர்ந்து ராம் பற்றிய அந்த நினைவுகளுள் அடங்கிப் போனாள்,அபி.



அது பல்கலை கழகங்களிற்கு இனிய காலம் என்றால், அவளது பீடத்திற்கு பூமாலை பொழியும் வசந்த கலாம்.புதிய மாணவர்கள் அனுமதியில் தான் ஏதோ தன் வாழ்வே தங்கியுள்ளதை போல் சுற்றி திரியும் சில ஆண் சீனியர் கூட்டமும் , தாம் வாங்கியதை அப்படியே கொடுத்து விட துடிக்கும் பரம்பரைகளாக சேட்டைகளிற்கு தயாராக இருக்கும் பெண் சீனியர் கூட்டமும் என கலை கட்டும் அத் தருணத்தில் தான் புத்தம் புதிய இலக்குகள்,கனவுகளுடன் புது மாணவியாக அந்த பீட வளாக பூமியில் தன் பாதத்தை பதித்தாள் அபி. பெரிதாய் பகிடிவதை தன் பீடத்தில் நிலவுவதில்லை என தெளிவாய் கூறப் பட்டு இருந்தாலும் சேட்டைகளும் ,கிண்டல்களும் இல்லாமல் இருக்கப் போவதில்லையே என்ற பயத்துடன்,உறு துணைக்கு தன் பள்ளியில் இருந்து தன்னுடனே தெரிவான மயூரியுடன் உள்ளே நுழைந்தவளை இடை மறித்தான் அவன்.

பார்த்தவுடனே தோன்றும் காதலில் அவளிற்கும் உடன்பாடு இல்லை அத்துடன் ராமை பார்த்தவுடனேயே அவளிற்கு காதல் தோன்றவும் இல்லை.தூரத்தே பத்து பத்து பெண்கள் குழுமி நின்றனர் . அந்த அதிகார தோற்றம் ,அவர்கள் சீனியர் தெய்வங்களே எனத் தெளிவாய் உரைத்தன.அவர்கள் ஏதேதோ கூறி கைதட்டி,சிரித்து அவனை வழியனுப்ப,அவன் நேரே இவர்கள் இருவர் முன்னும் வந்து நின்றான்.





"ஹாய் ...........நீங்களும் பர்ஸ்ட் இயர் தான?ராகிங் வாங்கியாச்சா? இல்லை எங்களோடு சேர்ந்து தானா?"என கேட்க ,அவன் ஏதோ நினைத்தவன் முகத்தில் நாற்பது வோட்ஸ் பிரகாசம் காட்டி," ஆமாம்...ஆம்ம்..."என தலையாட்டி வைத்தான். அதற்குள் சீனியர்களை அடைந்து இருக்கவே அவர்கள் "என்ன ராம்....ஜூனியர்ஸ் என்ன சொல்றாங்க?."என கேட்க கூட்டம் மீண்டும் ஆர்பரித்தது.அதன் பின் அவன் அங்கிருந்து நழுவ ,இவர்களிற்கான விசேட உபசரிப்புகளில் மூழ்கிப் போனார்கள். இப்படி ஆரம்பமான அவனுடனான நட்பு, பின்னாளில் ஜூனியர் அல்ல சீனியர் என தெரிய வந்த பின்னும் கூட முதன் முதலாய் வந்த நட்புணர்வே மேலோங்கி நின்றது.


வழமையான சீனியர்-ஜூனியர் உறவிலிருக்கும் சந்திப்புகள்,பாட கேள்விகளிற்கான விளக்கங்கள்,சிறிய உதவிகள்,அதற்கான பெரிய நன்றி நவில்தல்கள் என்பன கடந்து ,நண்பர்களாய் உறவாடும் உன்னத உறவு அபிக்கும் ராமிற்கும் இடையே வளர்ந்திருந்தது.துடுக்குத்தனமும் அளவிலா பேச்சும் என உற்சாக பேர் வழியான அபிக்கு அவள் பீடமே நண்பர்கள் என்றால் நண்பர்களுள் நண்பனாய் ராம் என்பதை விட பெரிதாய் எதுவும் இருக்கவில்லை.ஆனால் எல்லோருடனும் பழகும் ,எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அபிக்கு,ராம் அதிகமாய் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான். அவளுடன் அதிகமாக நேரத்தை கழித்தான்.மற்றவர்கள் பார்வை கேள்வியாய் உயர்ந்த போதும்,அபி அதை பொருட்படுத்த வில்லை.






இவற்றுக்கு முடிவாக ராம், அவனது பிறந்த நாளில் தனக்கான பரிசாய் அவள் மனதை தரும் படி கேட்ட து போதுதான் அபி இது பற்றி சிந்திக்க அரம்பிக்கலானாள். பிறந்த நாளன்று அவன் மனம் புண்ணாவதை விரும்பா சகியாய் மௌனம் சாதித்தாள்.அந்த அவகாசத்தை அவள் அவனது எதிர்காலத்திற்கு அவசியமானவள் என புரிய வைக்க பயன்படுத்தி கொண்டான்.கண்டதும் காதலே வெறும் ஈர்ப்பு,ஈற்றில் ஏமாற்றம், இங்கு நெடு நாளைய நட்பும், நிறைந்த அன்புமே மேலோங்கி நின்றதால் இருவர் மனமும் ஒன்றாகி போயின.


பல்கலை கழகக் காதல் என்றாலேயே பட்டாம்பூச்சியாய் சிறகடித்து, அதன் வாழ்கையை சீக்கிரமே முடித்துக் கொள்ளும் என்ற பொதுவான அபிப்ராயத்தை தவிடாக்கி , காதலர்கள் என்றாலும் தனித்தேயிராது , எல்லோருடனும் சகஜமான நட்பை பேணி, பண்பாய் நடந்து ,அபியும் ராமும் மற்ற மாணர்வர்களின் உதாரண ஜோடிகளாக ஒன்றரை வருடங்களாக இணைந்திருந்தனர்.பிரச்சினைகளற்று சீராக ஓடிக் கொண்டிருந்த தன் காதல் நதி ,பல்கலை காலம் முடிவுற மணவாழ்வு எனும் சகரத்துள் ,பெற்றோர் ஆசியுடன் இணையுமென்ற நம்பிக்கையில், கனவில் திளைத்துக் கொண்டிருந்த அபி,நனவில் நிலைத்தப் போது இறுதியாண்டில் இருந்த ராம் சிலகாலமாக புதியவனாகிக் கொண்டிருந்தான்.





இதுவரை தான் படித்து சென்ற நாவலில் முக்கால் பாகத்தில் ,புது தலைப்பு இடப் பட்டு ,புது கதை ஆரம்பமானதை போல் தவிப்பாய் ,பயமாய் நோக்கினாள் அபி. இறுதியாண்டு முடிய ,இன்னும் சில காலத்தில் சமூகத்துடன் பொறுப்பான அங்கமாக மாறவுள்ள ராம்,தானும் ஒரு பக்குவமான மனிதனாக இப்போது யோசிப்பதாயும், இரசிப்பதற்கு நன்றாயிருக்கும் சில விடயங்கள்,நடைமுறை வாழ்விற்கென வரும் போது எந்தளவு பொருத்தமாகும் என எண்ணுவதாக , ஏதோ புது விரிவுரை நடாத்தினான்.புதிராக நோக்கியவளிடம் நீ எல்லோருடனும் பழகுகிறாய்- எல்லையின்றி கதைக்கிறாய், எனக்கென பெரிதாய் முக்கியத்துவம் கொடுக்க விட்டாலும் கூட பரவாயில்லை.அனால் உன் இந்த செயல்கள் நாளைய வாழ்விற்கு பொருத்தமாயிராது என போதனை படித்தான்.இத்தனை நாட்களும் பார்க்க,பழக உறவாட பொருத்தமாயிருந்தவள் ,இன்றுதான் உனக்கு பொருத்தமற்றவள் என்று உணர்ந்தாயா ? என்றவளிடம் இப்போது தான் வாழ்க்கைக்கு தயாராவதகக் கூறி அடக்கினான்.
தன்னை நன்றாகப் புரிந்தவன் ,தன் இயல்பை முழுமையாக விரும்பியவன் , இன்று புதியவனாக குற்றம் சாட்டியதுடன் ,"பரவாயில்லை ,இனியேனும் எனக்காக உன்னை மாற்றிக் கொள்வதாகக் கூறாதே".ஏனென்றால் அது உன்னால் முடியாதக் காரியம் என கொண்ட காதல் மறந்து குறை படித்த கவலையால்,"என்னை உனக்காக மாற்றி ,நான் நானாயில்லாமல் உன்னோடு வாழும் அந்த வாழ்வு எனக்கும் தேவை இல்லை “என அவளும் தன்மானம் காக்க ,அவன் அவளிற்கிடையிலான வாக்குவாதம் அவர்கள் வளர்த்த காதலை அநாதையாக்கியது.

ராம் அபிக்கிடையிலான இறுதி சந்திப்பும் ,இறுதி தீர்மான அறிவுப்பும் இடம் பெற்று இன்றோடு இரு வாரங்கள். அவன் ஏதோ பகுதி வேலை செய்வதால் விரிவுரைகள் வருவதில்லை.அனால் அபிதான் ஒன்றாய் இருந்த அந்த இடங்களிற்கு, நண்பர்களிற்கு முகம் கொடுக்க தோல்வியுற்றவளாய் ,ஒரு வார காலம் வீட்டில் அடைந்து கிடந்தாள். விடயம் பீட நண்பர்களிடையே அம்பலமாகவே நண்பியர் வற்புறுத்தலால் வீட்டிலும் இருக்க பிடியாது,விரிவுரைகள் தேடி வந்தவளை துரத்திய பலரது அனுதாப பார்வையும், சிலரது ராமிற்கு சாதகமான பார்வையும் அவள் அவளாய் சிந்திக்க, பேச,படிக்க, சிரிக்க இடம் கொடாது மனச் சிறையில் மறியல் வைத்தன.






இன்னும் எத்தனை நாட்கட்கு இந்த அஞ்ஞாதவாசம் என எண்ணியவள் மனதில், நாளை ராமின் பிறந்த நாள், அவன் அவளை ,அவனிற்கென உரிமை கோரி இரு வருடங்கள் காணப் போகும் நாள். இரு வாரங்களாய் அவன் அவளிற்கு இல்லாமல் போனதே உரைக்கப் போகும் நாள் என மனம் நெருட ,விம்மிய மார்பை கட்டுப் படுத்தி, கண்ணீரைத் துடைக்க கைக் குட்டையை தேடினாள். இப்போது தன கவனிக்கிறாள்.அந்தி மாலை வானை அலங்கரிக்கத் தொடக்கி இருந்தது.இன்னும் தமது நெருக்கமான சம்பாஷணையில் இருந்த இடங்களில் அவ்வாறே காதல் ஜோடிகள். ஆனால் அவர்களிற்கிடையிலான காதல் எதுவரை? என்ற கேள்விகுறிகளுடன் , நேரமாவதை நினைவுக் கூர்ந்து, தன பீடம் நோக்கி நடக்கத் தொடங்கினாள் அபி.

மறுபடியும் ராம்......


அவன் பற்றிய நினைவுகள். அவன் எத்தனை சுலபமாய் அவளை மறந்து விட்டான்? ஆனால் அவளால் முடியுமா?....மீண்டும் பழைய அபியை எல்லோருடனும் பேசி ,சிரித்து, கிண்டலடித்து, கவனம் செலுத்திப் படிக்கத் தான் முடியுமா?......இனி, வாழ்வதே முடியாதே...என உண்மையாய் காதலித்தவள், ஒருவனே உளமார நேசித்தவள் படும் துயருள் உழன்றுக் கலைதவளாய் ,இந்த பெரிய நீண்ட சிற்றுண்டிச் சாலையில் ,யாருமே இல்லாத மேசையோரமாக அமர்ந்தாள். எவ்வளவு நேரம் வெறித்த பார்வையுடன் ,வெகு நேரம் அமர்ந்திருந்தாளோ அவள் அறியாள்.

" என்னம்மா?...கவலை தனியே உட்கார்ந்து இருக்காய்?...."தம்பி வரவில்லையா? என கவனத்தை கலைத்தார் அவ் வயோதிபத் தாத்தா. அது சிற்றுண்டிச் சாலை மூடும் நேரம் என்பதால் அவர் மேசைகளைத் துடைத்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்.வழமையாய் ராமும் அவளுமாய் ஒன்றாக சம்பாஷித்துக் கொண்டிருக்கும் பொது, அவருடனும் நகைச்சுவை உரையாடுவது உண்டு என்பதாலேயே ,இன்று இவள் தனித்து இருப்பதை விசாரிக்கிறார்.தனது கவலைகள் தன்னுடன் இருக்கட்டும் என்றவளாய், கஷ்டப் பட்டு சிரித்தாள்.தலை வலி வேறொன்றுமில்லை எனப் பொய் ஒன்றைக் கூறி , அவர் மேலும் ஏதாவது கேட்டு ,தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடாது இருக்க, அவரது கவனத்தை திருப்ப ,அவளே அவரைப் பற்றி ,அவரது வீட்டைப் பற்றி விசாரித்தாள்.



a


மேசையை துடைத்துக் கொண்டு இருந்தவர் நிமிர்ந்து பெருமூச்சு விட்டப் படி நின்று ,"எப்படி இந்த வேலையை செய்து கொண்டு எப்படியம்மா வீட்டுக்கு போவது?ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்தவன் தான் ,பெற்ற பிள்ளைகள் கை கழுவி விட்டார்கள்.அதற்காக நான் கட்டி வந்த மனைவியை கை விட முடியுமா? அவள் என்னை காதலித்து எனக்காக அவளது வீடு-பெற்றோர்- உறவை விட்டு நானே எல்லாம் என நம்பி வந்தவள்,அவளை எப்படியம்ம்மா கை விடுவது?அதுதான் எந்த வயதில் எச்சில் தட்டு கழுவும் வேலையேனும் செய்தாவது அவளை காப்பாற்றுகிறேன்" என்றார். அவர் கண்கள் மறைத்து இருந்த வலியை மறையாது காட்டினாலும் கூட, அவரோ ஒரு வரவழைத்த புன்னகையுடன் "நானும் உங்களை போல் தானம்மா,இன்னும் எங்கள் அன்பு அப்படியே மாறாமல் இருக்கிறது.இன்னும் அவள் அங்கே இரவு சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பாள். நான் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு ஒரு ஐந்து ரூபா குற்றியை போட்டு தினமும் கதைத்து விடுவேன். பிறகே அவளிற்கு இராச் சாப்பாடு, எனக்கு இந்த சாலையோரத்தில் நிம்மதியான உறக்கம்" என தங்கள் அன்னியோன்னிய உறவை பெருமைப் பட்டு அடுத்த மேசை நோக்கி நகர்ந்தார்.






" என்னை காதலித்து ,என்னையே நம்பி,எனக்க எல்லாம் துறந்து வந்தவளை எப்படியம்மா கை விடுவது?" என்ற அவரது குரல் அவள் அடிச் செவியினில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.மெல்ல எழுந்து ,தன் புத்தகங்களை இறுக அணைத்தவள் ,சிற்றுண்டிச் சாலையிலிருந்து வாயிலை நோக்கி நடக்கத்தொடங்கினாள். நிற்கும் மரங்கள், கல் இருக்கைகள், கட்டிடங்கள், தெரிந்த நண்பர்கள், தெரியாத முகங்கள் என எல்லாம் கடந்து போயின. அவள் நெஞ்சில் நிலைத்து இருக்க தகுதியற்ற ராமும் நினைவுகளில் இருந்து விரைவில் கடந்து போவான். இதுவும் எதுவும் கடந்து போகும்.


வயோதிப வயதிலும் அந்த மனிதரிடம் உள்ள அன்பு, அக்கறை ,எது வந்தாலும் கை விடாத பிடிப்பு என்பன எந்த வயதிலேயே எல்லாத ராம் .....இயல்பான என்னை விரும்பாத ராம்.....உன்னை எனக்கும் பிடிக்கவேயில்லை என நெஞ்சம் உரக்கக் கத்தியது, அவள் மனம் இலகுவாகிறது.எப்போது அவள் நடையிலும் நோக்கு தெரிகிறது. எதிர்ப்பட்டவர்களை பார்த்து மனம் திறந்து புன்னகைக்கிறாள்.

ஏனென்றால் அவள் மனம் அறியும்,
பொன்னை- பொருளை- புகழை விரும்பும்
இந்த உலகில்
என்னை- எனக்காக விரும்பும் ஒருவன்
என்றேனும் வருவான்"
அதுவரை...............








கொழும்புப் பல்கலைகழக தமிழ்ச் சங்கத்து 2010 இளம் தென்றலுக்காய்
இவள் உங்களுள் ஒருத்தி.............











1 comment: