Saturday, January 1, 2011

என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2011 .






கழிந்தது ஒரு வருடம்,இதோ இன்னுமோர் மறு வருடம்,புது வருட மாய்.சரியாய் மணி பன்னிரண்டு பார்த்து புது வருட வாழ்த்து தனை நண்பர்,அன்பர்களிற்கு பகிர்ந்து,புதுவருட பட்டாசு கொளுத்தி, வான வேடிக்கை பார்த்து,மறுநாள் காலை கோவில் தரிசனம் செய்தல் என்பவற்றுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாது,அந்த மகிழ்வு உற்சாகத்தை வருடம் முழுதும் அதே போல் கொண்டு கழிக்க என் வாழ்த்துக்கள்.

அறிவுரை சொல்வது மிக இலகுவானது,அதை பின்பற்றுவதே கடினம் என்பது நான் மட்டும் அறியாதது அல்ல,நான் உட்பட அனைவருமே புது வருட முதல் நாளில் அதை செய்ய வேண்டும்,இதை செய்ய வேண்டும்,இந்த வருடத்தில் இதை படித்தே தீர வேண்டும்,செய்தே முடிக்க வேண்டும் என பட்டியல் இட்டு பின் அதில் ஒன்றை கூட முடிக்காமலே அதே பட்டியலுடன் அடுத்த வருடத்தை எதிர்க் கொள்ளுவது இயல்பாகி விட்டது.இதை இயற்கை என்று கவனயீனமாய் விடாது, இயலாமை என மனம் துவளாது,எதையும் அதிக உயரத்துடன் எதிர் பார்த்து முயன்று கொண்டே இருந்தால் அதில் ஒன்றாவது அடையாமல் இருக்கப் போவது இல்லை.இப்படி சொல்லும் போது தான் எனக்கு "நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதோ...." என்ற சினிமா வரிகள் நினைவுக்கு வருகின்றன.

சென்ற வருடம் நீங்கள் சாதித்த விடயங்கள் எவை? விரும்பி செய்த விடயங்கள் எவை? என்பவற்றை குறித்து அது தொடர்பானவற்றில் இந்த வருடம் அதிக கவனம் செலுத்தி அனுகூலங்களை பெறுவதனுடன், கடந்த வருடத்தில் எது குறித்து அதிகம் துன்புற்றீர்களோ ,எது பற்றி அதிக பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்தீர்களோ அவை தொடர்பில் அவதானமுடன்,ஆழம் பார்த்து இந்த வருடத்தில் நடந்து கொண்டு நன்மைகள் பல பெற என் பிரார்த்தனைகள்.

வாழ்க்கை ரோஜா மேல் படுக்கை அன்று அல்ல என்பது நான் கூறி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று அல்ல,அண்மையில் நான் வாசித்த சஞ்சிகை ஒன்று மனிதனுக்கு துன்பங்கள் நேருவதற்கான காரணங்கள் என இரண்டை சுட்டி காட்டி இருந்தது. அதாவது ஒன்று கடவுளை நினைவு படுத்திக் கொள்ள,மற்றயது நாம் பிழையான திசை நோக்கி பயணிக்க முற்படும் போது எம்மை சரியான வழிக்கு ஆற்றுப் படுத்த என்பன அவை.இனி துன்பம் வந்தால் துவளாது அவற்றுக்கு நன்றி கூறி ,எது நடந்தாலும் எல்லாவற்றுக்கும் ஓர் காரணம் உண்டென நம்பி செய்யும் எல்லா காரியங்களும் ஜெயமாகட்டும்.

நானும் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் இந்த புதிய வலைபூ தளத்தை எழுத ஆரம்பித்தேன், ஆனால் பல்கலை கழக வாழ்வின் பரபரப்புகள், பரீட்சைகளின் படபடப்புகளில் சிக்குண்டு பெரிதாய் செய்ய நினைத்து ஓர் சிறிதேனும் செய்ய முடிந்ததற்கு மகிழ்ந்து,இந்த வருடத்தில் நல்ல நேர முகாமைத்துவத்துடன் ,எழுத தூண்டும் அருமையான மன நிலையுடன் அதிகம் எழுத வேண்டும் என்றும், எல்லாவற்றுக்கும் மேலே சித்திரம் வரைய தேவையான சுவரான நம் தேகம் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என்றும் ஆவல் கொண்டு விடைப் பெறுகிறேன்



மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....!!!



இவள்,
எனக்குள் ஒருத்தி.

No comments:

Post a Comment